ஒருவந்த மன்றா லுறைமுதிரா நீராற் கருமந்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான் பட்டின்றே யென்றி பணைத்தோளாய்! கண்ணீரா லட்டினே னாவி யதற்கு. [பருவமன்றென்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள் பருவமே யென்றழிந்து சொல்லியது.] (பத.) பணைத் தோளாய் - மூங்கில் போலும் தோள்களையுடைய தோழியே! (நீ என்னை நோக்கி) ஒரு வந்தம் அன்று - (இது கார்ப்பருவ மென்பது) உறுதியல்லதாம், (என்னெனின்,) உறை - மழைத்துளிகள், முதிரா நீரால், முதிர்ச்சி பெறாத (மழை பெயல் நிரம்பாத) நீர்மையாலாம், கருமம்தான் - (வேலையில்லா வுனக்கு) வேலை தான், கண்டு - பருவமல்லாத வொன்றைப் பருவமாகக் கண்டு, அழிவு கொல்லோ - வருந்துவதோ? பருவம்தான், கார்ப்பருவமென்பது, பட்டின்றே - வரவேயில்லை, என்றி - என்று இங்ஙனம் பல்வகையாகச் சொல்லி என்னைத் தேற்றா நின்றாய், (யானோ) அதற்கு - அப்பருவமல்லாப் பருவத்திற்கு, ஆவி - எனது உயிரை, (பருவமென நினைத்து,) கண்ணீரால் - கண்ணீரினை நீராகக் கொண்டு, அட்டினேன் - தாரை நீராக வார்த்துக் கொடுத்தேன், (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) ஒருவந்த மன்றால் என்பது இது பருவமென்பது மெய்ம்மை யன்றா லென்றவாறு. உறை முதிரா நீரால் என்பது மழை பெயல் நிரம்பாத நீராலென்றவாறு; வம்ப மழை யென்றவாறாம், கருமந்தான் கண்டழிவு கொல்லோ என்பது கருமமாவது பருவமல்லாத பருவத்தைக் கண்டழிவதோ என்றவாறு. பருவந்தான் பட்டின்றே யென்பது பருவம் வந்து பட்டதில்லை என்றவாறு, என்றி என்பது இவையெல்லாஞ் சொல்லி என்னைத் தேற்றா நின்றாய் என்றவாறு பணைத்தோளாய் கண்ணீரா லட்டினே னாவி யதற்கு என்பது கண்ணீரே நீராக வார்த்து என்னுயிரைப் பருவத்துக்குக் கொடுத்தேன், பணைத்தோளாய் என்றவாறு.
|