(ப-ரை.) கானங் கடியரங்காகக் கோடலார் வியந்து கைம்மறிப்ப, முகில் பாட, வண்டுகள் யாழாக, வேனற் காலத்துக் களியாத மயில் களித்தாடாநிற்க, வாட்கண்ணாய்! சொல்லாய்; காதலரைப் பிந்ந்தார் இறந்துபடாது உளராகியுய்யுந் திறத்தை. (விரி.) வேனல் - கானல் - காங்கை: கொதிப்பு, வண்டு + யாழ் = வண்டியாழ்: குற்றியலிகரம் அலகு பெறாது நின்றுளது. (111) தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காரார் குருந்தோடு முல்லை குலைத்தனகா ணாமும் விருந்தோடு நிற்றல் விதி. [பருவங்காட்டித் தோழி தலைமகளை வற்புறுத்தியது] (பத.) வாள்கண்ணாய் - வாளினை யொத்த கண்களையுடைய தலைவியே! தேரோன் - ஒற்றையாழித் தேரினையுடையவனாகிய கதிரோன், மலை - மேற்குமலைத் தொடர்களில், மறைய - மறையப் பெற்று மாலைக்காலந் தோன்றியவளவிலே, தீம் குழல் - (ஆயர்கள் ஆனிரைகளுடன் மனைக்குத் திரும்புங்கால் ஊதும்) இனிய புல்லாங்குழலோசையானது, வெய்து ஆக - கொடியதாக, கார் ஆர் - மழைபெயலாலே வளர்ந்து செழித்த, குருந்தோடு - குருந்த மரங்களுடனே, முல்லை - முல்லைச் செடிகளும், குலைத்தன - பூங்கொத்துக்கள் நிரம்பப்பெற்று நின்றன, காண் - (நீ இந்நிலையினை நம் காதலன் குறித்துச் சென்ற பருவமென்று) கண்டு தெளிவாயாக, (ஆகவே,) வாரான் - இப்பருவ காலத்தின்கண்ணே நங் காதலன் வருதலைச் செய்யானாய், விடுவானோ - நம்மைக் கைவிடுவானோ? (விடமாட்டான்,) நாமும் - ஆகலின், நாமும், (அவன் வருகையை எதிர்நோக்கி) விருந்தொடு நிற்றல் - அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல், விதி - நமது கடமையாம். (என்று தோழி தலைவியிடங் கூறினாள.) (ப-ரை.) பகலோன் மலையின்கண் மறைய இனிய குழல் இன்னாதாய் வெய்தாக இக்காலத்தின்கண் வாராதே விடுவானோ? வாட்கண்ணாய்! பசுமையார்ந்த குருந்துடனே
|