முல்லைகள் பூங்கொத்தை ஈன்றான காண்; இனி நாமும் அவர்க்கு விருந்து செய்து ஒழுகிநிற்றல் நெறி. (விரி.) இச்செய்யுளில் தலைவன் அன் விகுதி பெற்று வருகின்ற செய்தி இந்நூலுக்குப்புதியதாம், பழையவுரையின் இறுதியில் தலைவனைக் குறிக்குங்கால், "அவர்க்கு," என்று கூறியமை இதனை வலியுறுத்தும், கார் - பசுமையின் மிகுதியாகிய நிறமுமாம். (112) பறியோலை மேலொடு கீழா விடையர் பிறியோலை பேர்த்து விளியாக் கதிப்ப நரியுளையும் யாமத்துந் தோன்றாரா லன்னாய்! விரியுளைமான் றேர்மேற்கொண் டார். [பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது] (பத.) அன்னாய் - (என்னை யீன்ற) அன்னையை யொத்த தோழியே! ஓலை - மழையைத் தடுத்தற்குரிய ஓலைப்படல், மேலொடு - மேலாக வமைந்திருப்பதுடன், பறி - படுத்துறங்கும் பறியென்னும் படுக்கை, கீழா - கீழாகக் கொண்டு, (ஆட்டு மந்தையினைக் காத்தல் செய்யும்,) இடையர்-ஆயர்கள், பிறியோலை - ஆடுகளைப் பிரித்தற்குக் கருவியாகிய பிறியோலையை, பேர்த்து - அசைத்துக் காட்டி, விளியா - அழைத்துக்கொண்டு, கதிப்ப - அதட்டுதலைச் செய்ய, நரி - ஆடு்களைக் கொல்லக் காத்திருந்த நரிகள், உளையும் - அஞ்சிக் கதறும்படியான, யாமத்தும் - நள்ளிருட் போதாகியும், விரிஉளை - பரந்த பிடரிமயிரினையுடைய, மான் - குதிரைகள் பூட்டப்பட்ட, தேர்மேல் கொண்டார் - தேரி லமர்ந்து பொருள் தேடச் சென்ற தலைவர், தோன்றார் - திரும்பி வந்து சேர்ந்தாரில்லை, (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) படுத்துக் துயிலும் பறி கீழாக ஓலைப்படன் மழைத்துளியைக் காத்தற்கு மேலாக இடையர்கள் கிடந்து யாடுகளைப் பிறித்தற்குக் கருவியாகிய பிறியோலையைப் புடை பெயர்வித்து அழைத்துரப்ப, நரிகள் அஞ்சிக் கதறும் யாமத்தின்கண்ணும் தோன்றாராற் றோழி! விரிந்த உளையையுடைய மாவாற் பூட்டப்பட்ட தேரை மேற்கொண்டு போயினார்.
|