(விரி.) "ஓலை மேலொடு பறி கீழா," என எதிர் நிரனிறையாகக் கூட்டுக, பிறிவு = பிரிவு, ஆல் - அசைநிலை. மான் - னகர வொற்று சாரியை. (113) பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக் காத்துக் கனை துளி சிந்தாமைப் - பூத்துக் குருந்தே! பருவங் குறித்திவளை நைந்து வருந்தேயென் றாய்நீ வரைந்து. [பருவங் கண்டழிந்த தலைமகள் கேட்பத் தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய்ப் பருவமன்றென்று வற்புறுத்தியது] (பத.) குருந்தே - குருந்த மரமே! படுகடல் - ஒலிக்கின்ற கடல் நீரை, பாத்து - கடலினின்றும் பகுத்தெடுத்து, மாந்திய - குடித்த, பல் - பலவாகிய, கொண்மூ - முகில்கள், காத்து - அந் நீரைப் பாதுகாத்துக் கொண்டு வந்து, கனை - செறிவாக, துளி - மழைத்துளிகளை, சிந்தாமை - சிதறி நன்கு பெய்யாமலேயே, பூத்து - பூக்கள் நிரம்பப் பெற்று, பருவம் குறித்து - இது கார்ப் பருவமோ எனக் கருதச் செய்து, இவளை - என் தலைவியாகிய இவளை மட்டும், வரைந்து - தனியாக எடுத்துக்கொண்டு, நைந்து - உடல் மெலிந்து, வருந்தே - வருந்துவாய், என்றாய் நீ - என்று நீ பெரிதும் துன்புறுத்துகின்றனை. (என்று தோழி குருந்த மரத்தினை நோக்கிக் கூறினாள்.) (ப-ரை.) ஒலிக்கின்ற கடலைப் பருகி அந்நீரைக் காத்துக் கருமுற்றிப் பகுத்துச் செறிந்த துளிகளைச் சிதறுவதற்கு முன்பே பூத்துக் குருந்தே! பருவத்தைக் குறித்துக் காட்டி இவளையே வரைந்து வருந்துவாய் என்றாய் நீ. (விரி.) பாத்து - பகுத்து: மரூஉ. வருந்து - ஏவலொருமை வினைமுற்று, ஏ - இசைநிறை. சிந்தாமை - எதிர்மறை வினையெச்சம். (114) படுந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்க மேலுங் கொடுந்தடங்கட் கூற்றுமின் னாக - நெடுந்தடங்கண்
|