[தலைமகளைத் தோழி பருவங் காட்டி வற்புறுத்தியது] (பத.) பூங்கோதாய் - அழகிய கூந்தலையுடைய தலைவியே! கதநாகம் - சினமிக்க பாம்புகள், புற்று - புற்றினை (பாதுகாப்பிடமாகக் கொண்டு,) அடைய - சேரும்படி, கார் ஏறு - முகிலின் கண்ணேயுள்ள இடியானது, சீற - சினந்து முழங்கவும், மதநாகம் - மதத்தினையுடைய யானையானது, மாறு - அவ்விடிக்கு மாறாக, முழங்க - ஒலித்து ஆரவாரிக்கவும், புதல் நாகம் - புதர்களாற் சூழப்பட்ட சுரபுன்னை மரங்கள், வெள்ளி - வெள்ளியினைப் போன்ற விதழ்கள், புறமாக - புறத்தே சூழ்ந்திருக்க, பொன் - பொன் போன்ற பூந்தாதுக்களை, பயந்த - கொண்டனவாகப் பூக்கவும், (காதலன் கூறிய காலமாகிய கார்ப்பருவம் வந்தது; காதலனும் காலந் தவறாது வரப் போகின்றனன்! அப்படியிருக்க,) மெல்தோள் - நின் மெல்லிய தோள்கள், இனி - இப்பொழுது, என் பசந்த - என்ன சாரணமாகப் பசலை பூக்கலாயின? (என்று தோழி தலைவியை வினவி வருந்த வேண்டாவென வற்புறுத்தினாள்.) (ப-ரை.) சினத்தினையுடைய பாம்புகளும் புற்றினையடையும் வகை உருமேறு வெகுண்டிடிப்ப, மதத்தையுடைய யானைகள் அவ்வுரு மேற்றுக்கு எதிரே முழங்க, புதலால் சூழப்பட்ட நாகமரங்கள் வெள்ளிபோலும் இதழ்கள் புறஞ்சுற்றப் பொன்போலுந் தாதுக்களை உள்ளே பயந்தனவாதலாற் பூங்கோதாய்! நின் மென்றோள்கள் யாது காரணத்தாற் பசந்தன இப்பருவத்து? (விரி.) கோதை - பெண் மயிர்; கூந்தல்: மாலை. (117) கார்தோன்றிப் பூவுற்ற காந்தண் முகைவிளக்குப் பீர்தோன்றித் துாண்டுவாண் மெல்விரல்போ - னீர்தோன்றித் தன்பருவஞ் செய்தது கானந் தடங்கண்ணாய்! என்பருவ மன்றென்றி யின்று. [பருவம் அன்றென்று வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது.] (பத.) தடம் - பரந்து சொல்லும்படியான, கண்ணாய் - கண்களையுடைய தோழியே! விளக்கு - (வீட்டின்கண்ணுள்ள)
|