14

நாகம் - நாகப்பாம்புகள் (நிறைந்துள்ளன,) ஆயும் கால் - நன்காராய்ந்து நோக்கின், புறம் எல்லாம் - அவ்வெல்லையின் வெளிப்பக்கங்களெல்லாம், கைவாய - கையோடு சேர்ந்த வாயினையுடைய, நாகம் - யானைகள், சேர் - நிறைந்த, காடு - காடுகள். (உள்ளன, என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) ஒரு மலைபோல எல்லா மலையும் தம்முள் அளவொக்க உயர்ந்து சூழ்ந்த அரிய எல்லையுள் உள்ள தாம் எங்கள் சீறூர்; நீ வரும் அவ்வெல்லையுள் உள்ளகத்தின்கண் உள்ளன ஐந்துவாயையுடைய நாகங்கள்; புறத்துள்ளன ஆராயுங்காற் கையொடுசேர்ந்த வாயையுடைய யானைகள் சேர்ந்த காடுகள்.

(விரி.) நாகம் - யானை, பாம்பு. வரை - மலை, எல்லை. சீறூர் - மலைநாட்டுச் சிற்றூர்.

(13)

வருக்கை வளமலையுண் மாதரும் யானு
மிருக்கை யிதண்மேலே மாகப்-பருக்கைக்
கடா அமால் யானை கடிந்தானை யல்லாற்
றொடா அவா லென்றோழி தோள்.

[செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது]

(பத.) வருக்கை - ஒருவகைப் பலா மரங்கள் (மிகுந்த), வள மலையுள் - வளப்ப நிறைந்த மலையினிடத்திலே, மாதரும் - என் தலைவியும், யானும் - நானும், இருக்கை - (தினைப்புனத்தின்கண்) இருப்பிடமாக அமைத்துள்ள, இதண் மேலேம் ஆக - (ஒருகால்) பரணின் மேலாக இருக்க, (அப்பொழுது எங்கட்கு இடையூறாகத் தோன்றிய,) பரு கை - பருத்த துதிக்கையினையும், கடாம் மால் - மதநீரால் மிக்க மயக்கத்தினையுங் கொண்ட, யானை - யானையினின்றும் (எங்களை,) கடிந்தானை - காப்பாற்றிய அக் காளை போல்வானை, அல்லால் - அன்றி, (வேறு எவரையும்,) என்தோழி - என்னுடைய தலைவியின், தோள் - தோள்கள், தொடா - தீண்ட மாட்டாவாம், (என்று தோழி செவிலியிடங் கூறினாள்.)