(ப-ரை.) வருக்கைப் பலாவினையுடைய வளமலையின் கண் மாதரும் யானும் எமக்கிருக்கையாகிய பரண்மேலேயிருந்தேமாக, பெரிய கையினையுங் கடாத்தையும் பெருமையையும் உடைய யானையைத் துரந்து கடிந்தானை யன்றித் தீண்டாவால், என்றோழியுடைய தோள்கள். (விரி.) கடாஅமால், தொடாஅவால் - இசைநிறை யளபெடைகள். ஆல் - அசைநிலை இது களிறுதரு புணர்ச்சி எனப்படும். (14) வாடாத சன்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது-கோடா வெழிலு முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. [தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த விடத்துத் தலைமகளின் தந்தைக்குந் தனையன் மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது.] (பத.) வாடாத - குறைவுபடுத லில்லாத, சான்றோர் - (தலைவன் வரைவு வேண்டியனுப்பிய) பெரியோர்களினது, வரவு - வருகையினை, எதிர் கொண்டிராய் - ஏற்றுக் கொண்டவர்களாய், கோடாது - மாறுபடாது (உடம்பாடு கொண்டு,) நீர் கொடுப்பின் அல்லது - நீர் வார்த்துக் கொடுத்தலாகிய மண முறையில் மகளைக் கொடுத்தாலல்லாமல், கோடா - தளர்ச்சியுறாத, எழிலும் - நம மகளின் கட்டழகும், முலையும் - முலைகளுமாகிய, இரண்டிற்கும் - இரண்டினுக்கும், முந்நீர் - கடலாற் சூழப்பட்ட, பொழிலும் - இவ்வுலகமும், போந்து - பொருந்தியதாக வந்து நின்று, விலையாமோ - பரிசமாகக் கொளளத் தக்கதாமோ? (ஆதலின், மாறாக் காதலினையே முலைவிலையாக மதிக்கவண்டும், என்று நற்றாய் கூறினாள்.) (ப-ரை.) தள்ளாத சான்றாண்மையை யுடையார் வரவை எதிர்கொண்டிராய்க் கோடாது உடம்பட்டு நீர் கொடுப்பினன்றித் தளராத அழகும் முலையும் என்னும் இரண்டிற்கும் முந்நீராற் சூழப்பட்ட வுலகும் விலையாமோ நிரம்பி.
|