ணின்றாள் வலியாக நீவர யாய்கண்டா ளொன்றாள்காப் பீயு முடன்று. [தோழி படைத்துமொழி கிளவியான் வரைவு கடாயது.] (பத.) பனிவரை - குளிர்ந்த குவடுகளையும், நீள் - நீண்டுயர்ந்த, வேங்கை - வேங்கை மரங்களையுங் (கொண்ட,) பயமலை - பல்வகை வளங்கள் நிறைந்த மலைகள் சூழ்ந்த, நல் நாட - நல்ல நாட்டிற்குத் தலைவனே! இனி - (இதற்கு முன் எமது தலைவியை மணவாது நாளைக் கழித்தாய்) இனிமேலாகிலும், வரையாய் - (அங்ஙனஞ் செய்யாமல்) மணந்து கொள்வாயாக, என்று எண்ணி - என்று நீள நினைந்து, சொல்வேன் - (நினக்கு ஒன்று) சொல்கின்றேன், முனிவரையுள் - (கொடுமைச் செயலால்) வெறுக்கத்தக்க இம் மலையின்கண், நின்தாள் - நின் கால் வன்மையே, வலியாக - துணையாக, நீ வர - நீ வருதலை, யாய் - எம்முடைய அன்னை, கண்டாள் - பார்த்தவளாகி, உடன்று - எம்மோடு சினந்து, ஒன்றாள் - மாறுபட்டு, காப்பு ஈயும் - காவலைத் தாராநின்றாள். (ஆகலின், தலைவியை விரைவில் மணந்து களிப்பாயாக, என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) குளிர்ந்த குவடுகளையும் நீண்ட வேங்கை மரங்களையும் உடைய பயமலை நாடனே! இதற்கு முன்பு வரைந்திலையாயினும் இனி வரைந்து புகுதாய் என்று நினக்கு ஆராய்ந்து சொல்வேன்; வெறுக்கத்தக்க மலையின் கண் நின்தாளாண்மையே வலியாக இரவின்கண் நீ வர எம் அன்னை கண்டாள்; இனி எங்களோடு பகைத்து வெகுண்டு மிக்க காவலை எமக்குத் தரும். (விரி.) படைத்து மொழி கிளவி - தானாக வொன்றைக் கற்பித்துக் கூறுவது. வரைவு கடாதல் - மணம் புரிந்து கொள்ளும்படி தூண்டுதல். யாய் - செவிலித்தாய். நின் வரவினை செவிலித்தாய் அறிந்தாள்; இனி, எம்மேற் கண்காணிப்பினை மிகுதிப் படுத்துவாளாதலான் இனிக் களவுப் புணர்ச்சிக்கு இடமின்றிக் கற்புப் புணர்ச்சியே வேணடற்பால தாயிற்று என்பது தோழி கருத்தாம். (27)
|