28

மேகந்தோய் சாந்தம் விசைதிமிசு காழகி
னாகந்தோய் நாக மெனவிவற்றைப்-போக
வெறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு
மறிந்துழல்வா னேவிம் மலை.

[தலைமகன் சொன்ன குறிவழியே சென்று தலைமகளைக்
கண்டு பாங்கன் சொல்லியது.]

(பத.) மேகம் தோய் - முகில்கள் வந்து படியாநின்ற, சாந்தம் - சந்தன மரங்களும், விசை - விசை யென்னும் ஒருவகை மரங்களும, திமிசு - வேங்கை மரங்களும், காழ் அகில் - உள்ளீடு மிக்க அகில் மரங்களும், நாகம் - தேவருலகினை, தோய் - தீண்டி நிற்கும், நாகம் சுரப்புன்னை மரங்களும், என - என்று சொல்லப்பட்ட, இவற்றை - இவைகளை யெல்லாம், போக - ஒழியும்படி, எறிந்து - வெட்டி, உழுவார் - உழுது தினைப்பயிர் செய்பவராகிய மலை நாட்டாரின், தங்கை - பின்னவளாகிய இத் தலைவியின், இரும் தடம் கண் - பெரிய அகன்ற கண்களை, கண்டும் - பார்க்க நேர்ந்தும், மறிந்து - இங்கிருந்து மீண்டு, உழல்வான் - அங்கு வர முயன்று பாடுபட்டு வந்த தலைவன், ஓ - ஆ! இம்மலை - இந்த மலையினைப் போன்ற நிலைத்த நெஞ்சினனே யாவன். (என்று தோழன் தலைவியைக் கண்டு தலைவனை வியந்து தனக்குட் டானே கூறிக் கொண்டனன்.)

(ப-ரை.) முகிலைத் தோயாநின்ற சந்தனமும், விசை மரமும், திமிசும், காழகிலும், துறக்கத்தைச் சென்று தோயாநின்ற நாகமரமும் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் போக வெட்டிப் புனமுழுவார் தங்கையாகிய இவளுடைய இருந்தடங்கண் கண்டுவைத்தும், இங்கு நின்றும் மீண்டு அங்குவரவல்ல எம்பெருமான் இத்தோன்றுகின்ற மலைபோல் நிலையுடையன்.

(விரி.) ஓ - வியப்பிடைச் சொல். இது பாங்கற் கூட்டத்தின்பாற் பட்டதாம். பாங்கன் - தோழன்.

(28)

பலாவெழுந்த பால்வருக்கைப் பாத்தி யதனேர்
நிலா வெழுந்த வார்மண னீடிச் - சுலாவெழுந்து