செய்தவர்கள், யார் - யாவர்? உரையாய் - (அன்பு கூர்ந்து) தெரிவிப்பாயாக. (என்று தலைவி கடலை நோக்கிக் கூறினாள்.) (ப-ரை.) பெருங்கடலினானே வந்து சேர்ந்த வெண் மணற் றண் கானலின்கண் வந்து பரவாநின்ற திரை சேர்ந்த மாக்கடலைச் சேர்ந்த தண்பரப்பினை யுடையான் மார்பினான் வருத்தப்படாத பெருங்கடலே! என்னைப் போலக் கண்டுஞ்சுகின்றிலை; இக் கண்டுஞ்சாமையைச் செய்கின்ற என்போலுந் துன்பத்தை நினக்குச் செய்தார் யாவர் சொல்லாய்? (விரி.) அணங்கா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கழிபடர் - மிக்க துன்பம். கிளவி - சொல். (38) தந்தார்க்கே யாமாற் றடமென்றோ ளின்னநாள் வந்தார்க்கே யாமென்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே காவா விளமணற் றண்கழிக் கானல்வாய்ப் பூவா விளஞாழற் போது. [நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்துத் தோழி செவிலிக் கறத்தொடுநின்றது] (பத.) வந்தவர்க்கு - (கடற்காட்சி காண்பான்) வந்த மக்கட்கு, கா ஆம் - (நிழலினைக் கொடுத்துப்) பாதுகாக்குமிடமாகும், இள மணல் - நுண்ணிதான மணல் பரவிய, தண் - குளிர்ந்த, கழி - உப்பங்கழிகளை (யருகே கொண்ட,) கானல்வாய் - கடற்கரைச் சோலையினிடத்திலே, (வந்து) பூவா - முன்பு பூவாது (அப்பொழுதுதான் பூத்த), இள ஞாழல் - இளமையான கோங்கினது, போது - பூவினை, தந்தார்க்கே - (என் தலைவி கையிற் பறித்துத்) தந்து சென்ற தலைவர்க்கே, தடம் மெல் தோள் - (தலைவியின்) பெரிய மெல்லிய தோள்கள், ஆம் - தகுதியுடையவாகும், இன்னநாள் - இப்பொழுது, வந்தார்க்கே - (மணம் பேசி) வந்தவர்க்குத்தான், ஆம் என்பார் - தகுதியுடையன என்று சொல்பவர்களுடைய, வாய் - வாய் மொழியின் உறுதிப் பாட்டினை, காண்பாம் - எத்தகையதென வுணர்வோம். (என்று தோழி செவிலியிடங் கூறினாள்.)
|