(ப-ரை.) கடலின்கட் சங்குகளே பெரிய மருப்பாக, காற்றே பாகனாக, திரையே அடற் கோட்டி யானையாக வருத்திக் கரையைக் குத்துகின்ற நீண்ட சேர்ப்பையுடையானே! செறிந்த இருளின்கண் வாராதொழிக; வருதலை வேண்டின், நீ வரைவா யாகவே வா. (விரி.) "திரை யானையா," என மாற்றுக. குத்தி வருத்துதல் இயல்பாகலின், "கரை பாய்ந்து உடற்று நீள் சேர்ப்ப," என விகுதி கூட்டிப் பிரித்துக் கொண்டு கூட்டப்பட்டதென்க. பழைய வுரையின்கண் இறுதியிற் பெரிய எழுத்துக்களாகக் காணப்படுந் தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டதாம். ஏ - தேற்றப் பொருள் தரு மிடைச் சொல். (44) கடும்புலால் புன்னை கடியுந் துறைவ! படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாய்பொழி லேழைமா னோக்கி யிடம். [பகற்குறியிடங் காட்டியது] (பத.) கடும் - மிகுந்த, புலால் - புலானாற்றத்தை, புன்னை - புன்னை மலர்கள், கடியும் - (தமது நறு நாற்றத் தான்) விலக்கும்படியான, துறைவ - துறைமுகத்திற்குரிய தலைவனே! தடம் - பெரிய, புல் ஆம் - புல் இனத்தைச் சார்ந்தது என்று சொல்லும்படியான, தாழை - தாழை மரங்களும், மா - பெரிய, ஞாழல் - கோங்கு மரங்களும், ததைந்து - நெருங்கி, உயர்ந்த - வானளாவிய, தாழ் - (பலரும்) தங்குதற்குரிய, பொழில் - பூஞ்சோலை, படும் புலால் - காயவைத்துள்ள மீன்களைக் (கவரவரும்,) புள் - பறவைகளை, கடிவான் - விலக்கும்பொருட்டு, புக்க - தொடங்கிய, ஏழைமான் - வேடுவர்களாற் சூழப்பட்ட மான் போன்ற, நோக்கி - பார்வையினையுடைய எம் தலைவியின், இடம் - விளையாடுமிடமாம், (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) மிக்க புலானாற்றத்தைப் புன்னைப் பூக்கள் நீக்குந் துறைவனே! புலாலிற் பட்ட புள்ளைக் கடிய
|