வேண்டிப் புக்க ஏழை மானோக்கி விளையாடுமிடம், பெரிய புல்லாகிய தாழையும் ஞாழலும் நெருங்கி யுயர்ந்த தாழ்பொழில். (விரி.) புலால் - கெடுநாற்றம், கருவாடு. புல் - புறக்காழுடைய பொருள். தாழை முதலியன உள்ளீடின்றிப் புறத்தே மட்டும் வன்மை பெற்றிருத்தலின், "தடம் புலாந்தாழை," எனலாயினர். தொல்காப்பியரும், "புறக்காழுடையன புல்லென மொழிப," (தொல். பொருள். மரபு. 85.) என்றார். (45) தாழை தவழ்ந்துலாம் வெண்மணற் றண்கானன் மாழை நுளையர் மடமக - ளேழை யிணைநாடி லில்லா விருந்தடங்கண் கண்டுந் துணைநாடி னன்றோ மிலன். [தலைமகன் சொல்லிய குறிவழி யறிந்து தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது] (பத.) தாழை - தாழை மரங்கள், தவழ்ந்து - படர்ந்து, உலாம் - பரவி நிற்கும், வெண் மணல் - வெள்ளிய மணல்கள், (நிரம்பிய,) தண் கானல் - குளிர்ந்த கடற்கரைச் சோலையிலேயுள்ள, மாழை - அழகிய, நுளையர் மடமகள் - நெய்த னிலத்தலைவர்களின் இளையமகளாகிய, ஏழை - இப்பெண்பாவையினுடைய, இணை நாடில் - ஒப்புமை யுண்டோவென ஆராயின், இல்லா - அவ்வொப்புமை கிடைக்காத, இரும் தடம் கண் - மிகப் பெரிய கண்களை, கண்டும் - பார்க்க நேர்ந்தும், துணை - பாங்கனாகிய என்னை, நாடினன் - தேடி வந்து சேர்ந்தவனாகிய என் தலைவன், தோம் இலன் - சிறிதுங் குற்றங் கூறப் பெறும் தன்மை கொண்டவனல்லன். (என்று தோழன் கூறிக் கொண்டனன்.) (ப-ரை.) தாழைகள் படர்ந்து பரக்கும் வெண்மணலையுடைய தண்கானலின்கண் வாழும் மாழைமையையுடைய நுளையர் மடமகளாகிய இவ்வேழையுடைய ஒப்புமை நாடிலில்லாத இருந்தடங்கண் கண்டுந் துணையை நாடிய எம்பெருமான் ஒரு குற்றமு மிலன்.
|