(விரி.) இடந்தலைப் பாட்டிற் புணர்ந்து திரும்பிய தலைவனைப் பாங்கன் கண்டு, "எளிய பெண்பாலிடத்தே இறைவன் மனம் பற்றியது இழுக்காம்," என்று முன்னர் எண்ணிப் பின்னர்த் தலைவன் காட்டிய குறிவழி யுணர்ந்து வந்து தலைவியைக் கண்டு வியக்கின்றானாகலின், "துணை நாடினன்றோமிலன்," எனக் கூறலாயினன் என்க. (46) தந்தாயல் வேண்டாவோர் நாட்கேட்டுத் தாழாது வந்தானீ யெய்துதல் வாயான்மற் - றெந்தாய்! மறிமகர வார்குழையாள் வாழாணீ வார லெறிமகரங் கொட்கு மிரா. [தோழி நெறிவிலக்கி வரைவு கடாயது] (பத.) எந்தாய் - எம்பெருமானே! தந்து - (வறிதே சிலரைக்) கொண்டு, ஆயல் வேண்டா - (மணவினை) ஆராய்ச்சி செய்து (காலத்தைப் போக்க) வேண்டுவதின்று, ஓர்நாள் - நல்லதொரு நாளினை, கேட்டு - ஆராய்ந்து, தாழாது - (காலத்தை) நீட்டியாதே, நீ வந்தால் - நீ (மணம் பேசி) வருதலைச் செய்வாயானால், எய்துதல் - (இவளை) அடைதல், வாய் - (நினக்குக் கட்டாயம்) வாய்க்கும். எறி - (கரைவழியே செல்பவர்களைத்) தாக்கும், மகரம் - சுறா மீன்கள், கொட்கும் - (கழிகளில்) சுழன்று திரியும், இரா - இரவின்கண், வாரல் - (இனி) வாராதிருப்பாயாக, (அன்றி மேலும் வருவாயாயின்,) மறிமகரம் - குட்டியாகிய (சிறிய) சுறாமீனினைப்போன்று, வார் - வார்க்கப்பட்ட, குழையாள் - காதணிகளையுடைய தலைவி, வாழாள் - உயிர் வைத்திருக்கமாட்டாள். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) சிலரைக் கொணர்ந்து ஆராயவேண்டுவதில்லை; நல்லதொரு நாட்கேட்டு நீட்டியாதே நீ வரைதற்கு வந்தால் இவளை எய்துதல் மெய்ம்மையால்: எம்மிறைவனே! எறிசுறாக்கள் கழியெங்குஞ் சுழலு மிராவின்கண் வாரல்; வரின், மறிமகர வார்குழையாள் உயிர் வாழாள். (விரி.) ஆல் - அசைநிலை. மற்று - அசைநிலை. (47)
|