மக்கட்கு அருங் கேட்டினை விளைவிப்பதாயுள்ளது,"என வியந்து கூறினன். தலைமகளின் உயர்வு பெரியோரின் சான்றாண்மையினையும் எதிர்த்து வெல்லுதற் குரிய தென்பார், "சாவார் சான்றாண்மை சலித்திலா மற்றிவள்," என்றார், மற்று - அசைநிலை. உரீஇ - சொல்லிசை யளபெடை; அலகு பெறாது நின்றது, ஆல் - அசைநிலை. (48) திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல் விடுவாய்ப் பசும்புற விப்பிகான் முத்தம் படுவா யிருளகற்றும் பாத்து. [தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது] (பத.) திரைமேல் - அலைகளுக்கு மேலே, போந்து - வந்து, கரைமேல் - கரையோரங்களில், எஞ்சிய - ஒதுங்கி நின்ற, விடுவாய் - பிளந்த வாயினையும், பசும்புறம் - பசிய வெளிப்பக்கத்தினையும் (கொண்டுள்ள,) இப்பி - சிப்பிகள், கால் - வெளிவிட்ட, முத்தம் - முத்துக்கள், தெள் கழி - தெளிந்த கடற்கழிகளையும், கானல் - சோலைகளையுஞ் (சூழக் கொண்டு,) விரைமேவும் - மணம் பொருந்திய, பாக்கம் - பட்டினத்திற்கு, விளக்கா - விளக்குகளாக வமைந்து படுவாய் - இருள்படு மிடங்களிலெல்லாம், இருள் - அவ்விருளை, பாத்து - (பல்லாறாகப்) பிரித்துச் (சிதறடித்து,) அகற்றும் - நீக்கும், (ஆதலான், பலர் நின் வரவினை யறிந்து அலர் தூற்றுவர், என்று தோழி தலைமகற்கு இரவுக்குறி மறுத்துரைத்தனள்.) (ப-ரை.) திரைமேற் போந்து கரைமே லொழிந்த விடு வாயையும் பசும்புறத்தையுமுடைய இப்பி கான்ற முத்தம், தெண்கழிக்கானலின் விரைமேவும் பாக்கம் ஒளியுண்டாம் வகை இருள்படுமிட மெல்லாம் அவ்விருளைப் பகுத்தகற்றும். (விரி.) பாக்கம் - கடற்கரையினையடுத்த வூர்; பட்டினம். முத்தம் விளக்கா, அகற்றும், என முடிக்க இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துரைத்தது, என விரித்துரைத்துக் கொள்க, நச்சினார்க்கினியர்,
|