50

சாலிகை போல்வலை சாலப் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று.

[தலைமகற்குத் தோழி குறைநேர்ந்து பகற்குறியிட
மறியச் சொல்லியது]

(பத.) கடும்புலால் - கொடிய புலால் நாற்றத்தைக் கொண்ட., வெண்மணல் - வெள்ளிய மணலையுடைய, கானல் - கடற்கரைச் சோலையினை, உறு - அடுத்துப் பொருந்திய, மீன் படும் புலால் கண் - மீனாகிய காயவைத்துள்ள கருவாட்டினிடத்தே, பார்த்தும்-(பறவைகள் படியாமல் யாங்கள்) பார்த்துக் கொண்டிருப்பேம், பகர்தும் - (அக் கருவாட்டினை) விற்பதும் செய்வேம், அடும்பு எலாம் - (அவ்விடத்துள்ள) அடப்பங் கொடிகளெல்லாம், பாலிகை - முளைப்பாலிகையினைப் போல, பயின்று - ஒன்றாகக் கூடி, பூக்கும் - மலர்ந்து காணும், சால பல வலை-மிகவும் பல வலைகள், சாலிகை போல் - மெய்புகு கருவிகளை விரித்து வைத்தாற் போன்று, உணங்கும் - (அவற்றின்மேல்) காயவைக்கப்பட்டிருக்கும். (அவ்விடமே பகற்குறியிடமாகும், என்று தோழி தவைவனுக்குக் குறிப்பாகக் கூறினாள்.)

(ப-ரை.) கடும்புலாலையுடைய வெண்மணற் றண்கழிக் கானலின்கண் இருந்து, யாங்கள் ஆங்கடுத்த மீனாகிய படு புலாலின்கட் புட்டிரியாமற் பார்ப்பேம்; அவற்றை விற்பதுஞ் செய்வேம; அக்கானலின்கண் அடும்பெல்லாம் பாலிகை போலப் பூக்கும்; சாலிகை விரிந்தாற்போல வலைகளும உணங்கும்.

(விரி.) நேர்தல் - இணங்கல். பகர்தல் - விலைகூறி விற்றல். சாலிகை - மெய்புகு கருவி: கவசம்.

(52)

திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நா
ளாய்ந்து வரைத லறம்.

[தலைமகனைத் தோழி வரைவு கடாயது]