(பத.) திரை - அலைகள், பாகன் ஆக - யானைப்பாகனாகவும், திமில் - தோணிகள், களிறு ஆக - ஆண்யானைகளாகவும், கரை சேர்ந்த - கடற்கரையினை யடுத்துள்ள, கானல் - சோலைகள், படையா - சேனையாகவும் (கொண்டு,) வேந்து - அரசன், கிளர்ந்தன்ன - புறப்பட்டாற் போன்ற, வேலை நீர் - கடனீரையுடைய, சேர்ப்ப - துரைமுகத்திற்குரிய தலைவனே! விரையாது - (களவுப் புணர்ச்சியில்) மிகுந்த விருப்பங்கொண்டு செல்லாது, நாள் ஆய்ந்து - நல்லநா ளொன்றினைப் பார்த்து, வரைதல் - இவளை மணம் புரிந்து கொள்வது, அறம் - நல்லொழுக்கமாகிய நன்னெறியாம். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) திரையே பாகனாகத் திமிலே களிறாகக் கரை சேர்ந்த கானலின் கண்ணுள்ள பல புட்களே படையாக வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்பனே! விரையாதே நல்லநா ளாராய்ந்து அறிந்து வரைந் திவளைக் கோடல் நினக் கறமாவது. (விரி.) கானல் - சோலையின்கண் வாழும் பறவை என்றுமாம்: இடவாகு பெயர். வேலை நீர், பாகனாக, களிறாக, படையாக வேந்து கிளர்ந்தன்னது எனக் கொள்க. வேலை - வேலா என்ற வட சொற்றிரிபு. (53) பாறு புரவியாப் பல்களிறு நீடிமிலாத் தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத மன்கிளர்ந்த போலுங் கடற்சேர்ப்ப! மற்றெமர் முன்கிளர்ந் தெய்தன் முடி. [இதுவுமது] (பத.) பாறு - (மீன் முதலியவற்றைப் பற்றுவான் பறந்து திரியும்) பருந்துகள், புரவியா - குதிரைகளாகவும், நீள் - பெரிய, திமில் - தோணிகள், பல் களிறு ஆ - பல யானைகளாகவும், தேறு - தெளிவான, திரை - அலைகள், பறையா - பறைவாத்தியமாகவும், புள்-கடற் பறவைகள், படையா - சேனையாகவுங் கொண்டு, தேறாத - (அமைதியின் அருமையை) அறியாத, மன் - அரசர்கள், கிளர்ந்த போலும் - படையெடுத்துப் புறப்பட்டது போன்று
|