பெண்ணைத்து என முடிக்க. உலாஅய் - இன்னிசை யளபெடை. (57) வருதிரை தானுலாம் வார்மணற் கான லொருதிரை யோடா வளமை - யிருதிரை முன்வீழுங் கானன் முழங்கு கடற்சேர்ப்ப! வெண்வீழல் வேண்டா வினி. [தோழி வரைவு கடாயது.] (பத.) வரு திரை - (கரையை நோக்கி) வந்து கொண்டிருக்கின்ற திரைகள், உலாம் - உலாவுகின்ற, வார் - ஒழுகி யமைந்த, மணல் - மணலோடு கூடிய, கானல் - கடற் கழிகளினிடத்தே, ஒரு திரை - ஓர் அலையானது, ஒடாமுன் - சென்று சேர்வதற்கு முன்னே, இரு திரை - இரண்டு அலைகள், வீழும் - (வந்து) மோதும்படியான, வளமை - வளப்பத்தினையுடைய, கானல் - கடற்கரைச் சோலையினிடத்தே, முழங்கு - ஆரவாரிக்கின்ற, கடல் சேர்ப்ப - கடற்றுறைமுகத்திற்குரிய தலைவனே! இனி - இனிமேல், என் - என்னால் வந்து மேற்கொள்ளும் இக்களவுப் புணர்ச்சியினை, வீழல் - விரும்புதல், வேண்டா - வேண்டுவதின்று. (வரைவுப் புணர்ச்சியே வேண்டற் பாலதாம், என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) வருதிரைதான் வந்து உலவாநின்ற ஒழுகிய மணற்கானலின்கண் ஒருதிரை வந்து பெயர்வதற்கு முன்னே இரண்டு திரை வந்து வீழாநின்ற கானலின்கண் வந்து முழங்கு கடற்சேர்ப்பனே! என்னால் வந்து இப் புணர்ச்சியை விரும்பல் வேண்டா; இனி வரைந்து கொள்வாய். (விரி.) தான் - அசைநிலை. உலாம் - உலாவும்: செய்யு மென்னெச்ச வீற்றுயிர் மெய் கெட்டு வந்தது. (58) மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங் கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ - கான
|