மஞ்சள் நிறமாய் அழகுறக் காணலின், அது பொற்றாலி எனப்பட்டது. ஐம்படைத்தாலி - திருமாலின் படைகள் ஐந்தின் வடிவத்தையு மமைத்துச் செய்த அணிகலன். (67) வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார் பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - வொறுப்பபோற் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்க மென்னு ளுறுநோய் பெரிது. [பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது] (பத.) விளங்கு இழாய் - ஒளி மிக்க அணிகலன்களையுடைய தோழியே! புணர் முருக்கம் - நெருங்கிய முருக்க மரங்கள், ஒறுப்பபோல் - (என்னை) வருத்த வந்தன போன்று, பொன் உள் - பொன்னினிடத்திலே, உறு - பொருந்தியுள்ள, பவளம் போன்ற - பவழத்தினைப் போன்று மலர்ந்தன, (அவற்றால்,) என் உள்-எனது மனத்தினிடத்திலே, உறு - உற்ற, நோய் - துன்பம், பெரிது - மிகுந்துளது, வெறுக்கை கு - பொருள் தேடும் பொருட்டு. சென்றார் - சென்றிருப்பவராகிய காதலர். தோன்றார் - (வேனிற் பருவம் வந்தும்) காணப்பெறுகின்றாரில்லை, பொறுக்க என்றால் - இப்பருவத்தின்கண் நீ என்னை ஆற்று என்று சொன்னால். பொறுக்கல் ஆமோ - என்னால் ஆற்ற வியலுமோ? (இயலாது, என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) மிக்க பொருட் பொருட்டுச் சென்றார், விளங்கிழையாய்! வந்து தோன்றுகின்றிலர்; இப் பருவத்தின் கண் நீ என்னை ஆற்று என்றால் எனக்கு ஆற்றலாமோ? என்னை ஒறுப்பனபோலப் பொன்னின் உள்ளுற வைத்த பவளம் போன்ற, பொருத்திய முருக்கம் பூக்கள்; ஆதலால் என்னுள்ளத்துற்ற நோய் பெரிது. (விரி.) வெறுக்கை - காரணப் பெயர்; வெறுக்கவேண்டுவது. "வெறுக்கைக்குச் சென்றார்," என்பதில் தன்னை வெறுக்கும் பொருட்டுச் சென்றார் எனும் சொல்நயங் காண்க. (68)
|