| சென்றக்காற் செல்லும்வா யென்னோ விருஞ்சுரத்து நின்றக்கா னீடி யொளிவிடா - நின்ற விழைக்கமர்ந்த வேயே ரிளமுலையா ளீடில் குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு. [பொருள்வலித்த நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லிச் செலவழுங்கியது] (பத.) (நெஞ்சே!) நின்ற - நிலைபெற்ற, இழைக்கு அமர்ந்த - அணிகலன்கட்குத் தக்கவாய, ஏர் - அழகையுடைய, இளம் முலையாள் - இளமையான முலைகளைக் கொண்ட தலைவியின், ஈடு இல் - ஒப்பில்லாத, குழைக்கு அமர்ந்த - காதணிவரை சென்று கலக்கும், நோக்கின் குறிப்பு - கண்களின் பல கருத்துக்கள் கொண்ட பார்வை, நீடி - நெடுந்தொலை தொடர்ந்து (நம் முன்னே வந்து), ஒளி விடா - ஒளிவிட்டு, இரும் சுரத்து - பெரிய இப்பாலை நில வழியே, நின்றக்கால் - எதிர்ப்பட்டுத் தோன்றினால், சென்றக்கால் - (பொருளின் பொருட்டு நாமிவளைப் பிரிந்து) போகுங்கால், செல்லும்வாய் - போகும் வகை, என்னோ - எங்ஙன மாமோ? (என்று தலைவன் தனக் குட்டானே வினவிக்கொண்டனன்.) (ப-ரை.) பொருளின் பொருட்டு நாமிவளை நீங்கிப் போயக்காற் போம்வகை யெங்ஙனேயோ? நெஞ்சே! மன்னிய அணிகட்குத் தக்க அழகையுடைய இளமுலையாளுடைய ஒப்பில்லாத குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்புக்கள் நம் முன்னே வந்து நீடி யொளிவிட்டு இருஞ்சுரத்திடையே தோன்றி நின்றக்கால். (விரி.) பொருள் வலித்தல் - பெருளினைத் தேட வேண்டு மென்று தீர்மானித்தல். செல வழுங்கல் - செல்லுதற்கு வருந்தி எண்ணல், ஏ - அசைநிலை. விளி, பொருளின் விளக்கங் கருதி வரவழைக்கப்பட்ட தென்க. இது, பொருள் தேடக் கருதிய தலைமகன் பிரிவா னேருந் துன்பங்களை எண்ணிக் கூறியதாகும். செல்அக்கால் - சென்றக்கால்; எதுகை நோக்கிய திரிபு. (69) அத்த நெடிய வழற்கதிரோன் செம்பாக மத்தமறைந் தானிவ் வணியிழையோ - டொத்த
|