தார் தத்தை - (கழுத்திண் கண்)மாலை போன்ற வரியினையுடைய கிளியினது, செவ்வாய் - சிவந்த வாயினின்றும் வெளிப்படும், வாய் மொழியும் - வாய்ப்பான சொற்களையும், கேளாதும் - தான் கேட்கப் பெறாதும், சீர் இன் ஆல் - சிறப்பினாலே, கரிய கண் - கருமையான கண்களை யொத்த, தண் - குளிர்ந்த, கயத்து - குளத்திடை (மலர்ந்த,) நீலமும் - நீல மலர்களையும், காணாதும் - காணப் பெறாதும், அ ஆயம் - அப் பண்ணைமகளிர், ஆற்றாதும் - (தலைவியினைப் பிரிந்து) பொறுக்க வியலாது துன்புறப் போவதையும், ஓர்த்து - நீள நினைந்து பார்த்து, ஒழிந்தாள் - (பின்பு உடன் போக்கை) விட்டாள், (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) செவ்வாயின்கட் டார்த்தத்தை வாய் மொழியைக் கேளாதும், கரிய கண்ணின்கட் டண்கயத்து நீலங்களின் றன்மைகளைக் காணாதும், அவ்வாயம் ஆற்றாதொழிவதனை யோர்த்துப் பின்பு உடன்போக்கை யொழிந்தாள்; என் பேதை அலர் காரணத்தான் முன்பு உடன்போக்கை மேற்கொண்டு. (விரி.) முன்னை ஞான்று. வலித்தல் - இன்றியமையாதென நினைத்தல். அறத்தொடுநிலை - உண்மையாகிய அறத்தினை மேற்கொண்டு செவிலி முதலியவர்களோடு சேர்ந்து நிற்றல். மாட்சிமைப் படல் - சிறப்பாகக் காணப்படல். அழுங்குவித்தல் - வருந்துவித்துத் தவிர்த்தல். இங்குத் தலைவி கிளிமொழி கேட்கப் பெறாதும், கயத்தின் நீலமலர்க் காட்சி காணப்பெறாதும், தன் பிரிவான் ஆயம் ஆற்றாதும் போவதனை எண்ணி உடன்போக்கினை ஒழித்தாள், என்று தலைவனிடந் தோழி கூறலாயினள். பழைய வுரையில், ஆயமகளிர் தலைவியின் கிளி மொழிகளைக் கேளாதும், நீலக்கண்களைக் காணாதும், வருந்துவர் என்பதனைத் தலைவி எண்ணி உடன்போக்கை யொழிந்தாள் எனத் தோழி கூறுவதாக விளக்கப்பட்டுளது. தலைவி ஆயமொன்றன் பிரிவை மட்டும் எண்ணி உடன்போக்கை யொழித்தாள் என்பதைக் காட்டிலும் தான் பயின்ற கிளி முதலிய மூன்றன் பிரிவை யெண்ணி உடன்போக்கினை யொழித்தாள் என்பது சிறப்பாமாகலான் அங்ஙனம் கண்ணளித்தாம். வாய்
|