மொழியும், நீலமும் - உம்மைகள் உயர்வு சிறப்புப் பொருளன. (74) புன்புறவே சேவலோ டூடல் பொருளன்றா லன்புற வேயுடையா ராயினும் - வன்புற் றதுகா ணகன்ற வழிநோக்கிப் பொன்போர்த் திதுகாணென் வண்ண மினி. [காமம் மிக்க கழிபடர் கிளவி: நிலத்தாற்பாலை; ஒழுக்கத்தான் நெய்தல்] (பத.) புன்புறவே - சிறிய பெட்டைப் புறாவே! சேவல் ஓடு - நின் தலைவனாகிய ஆண்புறாவோடு, ஊடல் - ஊடுதலை மேற்கொள்ளல், பொருள் அன்று - பயனில்லாத தொன்றாம், (என்னெனின்,) அன்பு உறவு ஏ - (எங்காதலர் எம்மிடத்து) அன்பாகிய உறவொன்றனையே, உடையராயினும் - (முன்பு) கொண்டிருந்தாரானாலும், இனி - இப்பொழுது, வன்பு உற்றது - (பிரிந்தவராய்) மன நெகிழ்ச்சியுறாது வலியரான தன்மையை, காண் - பாராய், அகன்ற - (தேரோடும் வந்து) நீங்கிய, வழி நோக்கி - வழிச்சுவட்டினைப் பார்த்துக்கொண்டு, பொன் போர்த்து - பொன்னிறம் உடலெல்லாம் மூடும்படி (வந்த,) வண்ணம் - பசலையெனும் வண்ணமாகிய, என் இது - என்னிலையாம் இதனை, காண் - பாராய். (என்று தலைவி கூறினாள்.) (ப-ரை.) புல்லிய நிறத்தையுடைய பேடைப்புறாவே! நின்சேவலோடூடல் நினக்குக் காரிய மன்றால்; எங்காதலர் எமக் கன்பு மிகவுடையாராயினும், அவர் மனநெகிழாது வலியரான தன்மையைப் பாராய்; அவர் தேரோடும் வந்து நீங்கிய வழிச் சுவடு நோக்கிப் பொன்னிறம் போர்க்க வந்த வண்ணமிதனைப் பாராய். இப்பொழுது. (விரி.) புறவு - பாலை நிலக்கருப் பொருள். இக்கருப்பொருளும், அகற்சி - (பிரிவு) ஆகிய உரிப்பொருளும் வந்துள்ளமையால் இச்செய்யுள் பாலைத் திணையிற் சேர்க்கப்பட்டது. ஆயினும், அகற்சி நீட்டித்தமையான் தலைவி காமமிக்கு இரங்கலாயின ளாகலின் நெய்தலின் உரிப்பொருள் பாலையின்கண் மயங்கி வரலாயிற்று. இவற்றையே துறையாகிய கருத்தினிடத்தே, "நிலத்தாற்
|