97

வீயும் வியப்புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை
நீயும் பிறரொடுங்கா ணீடாதே - யாயுங்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து.

[பருவமன்றென்று வற்புறுத்திய தோழிக்குத்
தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது]

(பத.) (தோழியே!) விய புறவின் - பெரிய முல்லை நிலத்தின் கண்ணேயுள்ள, மா கடுக்கை - சிறந்த கொன்றை மரமானது, வீழ்துளியான் - விழுகின்ற மழைத்துளிகளானே, ஆயும் - சிறுமிகள் ஆய்ந்து விளையாடும்படியான, கழல் ஆகி - கழற்சிக்காய்களைப் போன்ற அரும்புகளை முதன் முதலாக அரும்புவித்துப் பின், பொன்வட்டு ஆய் - பொன்னால் செய்யப்பட்ட சூதுக்கருவிகளைப் போன்று அவற்றை முதிர்வித்து, தார் ஆய்-பின்பு பூமாலைபோன்று அவற்றைப் பொலிவித்து, மடலாய் - பின்னர் அவற்றை இதழ்களாய் மலர்வித்து, குழல் ஆகி - மேலும் அவற்றைப் பெண்களின் கூந்தல்போல் காய்ப்பித்து, கூர்ந்து சுரிகோல் ஆய் - முடிவில் மிகுதியுங் காய்ப்பித்து துளையினையுடைய கொம்பாக அவற்றை மாற்றி, வீயும் - அழிப்பிக்கும், (இதனை) பிறரொடும் - மற்றைய தோழிமார்களோடும், நீயும் - உயிர்ப்பாங்கியாகிய நீயும், நீடாது - கால நீட்டிப் பின்றி உடனே, காண் - போய்க்காண்பாயாக. (என்று தலைவி தோழியிடங்கூறிக் கார்ப்பருவம் வந்து நின்றமையினை விளக்கிக் காட்டினாள்.)

(ப-ரை.) ஆயப்படுங் கழல்போல அரும்பி, பொன் வட்டுப்போல முதிர்ந்து, பின்னைப் பூமாலையாய், இதழாய் விரிந்து, மடவார் குழல்போலக் காய்த்து, பின்னைத் துளையையுடைய கோலாய் மிக்கு அழியாநின்றன; வியன் புறவின்கண்ணே வீழ்துளியானே பெருங் கொன்றைகள்: இதனைப் பிறரோடே நீ போய் நீயுங் காணாய் நீடியாதே.

(விரி.) இங்கு முதல்வினைகள் கழலாகி, வட்டாய், தாராய், மடலாய், குழலாகி, சுரியாய் எனச் சினைவினைகளாக முதல்சினை யொற்றுமை கருதிக் கூறப்பட்டுள்ளன. "புறவின், கடுக்கை, துளியான் ஆகி, வட்டாய், தாராய்,