2. நெய்தல்பாங்கற்குச் சொல்லியது
32. பானல் அம் தண் கழிப் பாடு அறிந்து, தன்னைமார்
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல்
படு புலால் காப்பாள் படை நெடுங் கண் நோக்கம்
கடிபு ஒல்லா; என்னையே காப்பு.
   
33. பெருங் கடல் வெண் சங்கு காரணமா, பேணாது
இருங் கடல் மூழ்குவார் தங்கை, இருங் கடலுள்
முத்து அன்ன, வெண் முறுவல் கண்டு உருகி, நைவார்க்கே
ஒத்தனம், யாமே உளம்.
   
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற
தோழி வரைவு கடாயது
34. தாமரைதான் முகமா, தண் அடை ஈர் மா நீலம்
காமர் கண் ஆக, கழி துயிற்றும் காமரு சீர்த்
தண் பரப்ப! பாய் இருள் நீ வரின், தாழ் கோதையாள்
கண் பரப்ப, காண், நீர் கசிந்து.
   
'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது
35. புலால் அகற்றும் பூம் புன்னைப் பொங்கு நீர்ச் சேர்ப்ப!
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல், சுலா அகற்றி,
கங்குல் நீ வாரல்; பகல் வரின், மாக் கவ்வை ஆம்,
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு.
   
தோழி வரைவு கடாயது
36. ‘முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு’ என்றே
குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற!
   
37. ஓத நீர் வேலி உரை கடியாப் பாக்கத்தார்,
காதல், நீர் வாராமை கண் நோக்கி, ஓத நீர்
அன்று அறியும்; ஆதலால், வாராது, அலர் ஒழிய,
மன்று அறியக் கொள்ளீர், வரைந்து.
   
காமம் மிக்க கழிபடர் கிளவி
38. மாக் கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர்
மாக் கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மாக் கடலே!
என் போலத் துஞ்சாய்; இது செய்தார் யார்-உரையாய்!-
என்போலும் துன்பம் நினக்கு?
   
நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து,
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
39. தந்தார்க்கே ஆமால், தட மென் தோள்-இன்ன நாள்
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம்;-வந்தார்க்கே
காவா இள மணல் தண் கழிக் கானல்வாய்ப்
பூவா இள ஞாழல் போது.
   
வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது
40. தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா,
‘இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு
ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து? என்று
போயினான் சென்றான், புரிந்து.
   
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு,
தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது
41. உருகுமால் உள்ளம், ஒரு நாளும் அன்றால்;
பெருகுமால், நம் அலர் பேண,-பெருகா
ஒருங்கு வால் மின்னோடு, உரும் உடைத்தாய், பெய்வான்,
நெருங்கு வான் போல, நெகிழ்ந்து.
   
நயப்பு; கையுறையும் ஆம்
42. கவளக் களிப்பு இயல் மால் யானை, சிற்றாளி
தவழ, தான் நில்லாததுபோல், பவளக்
கடிகையிடை முத்தம் காண்தொறும், நில்லா-
தொடி கையிடை முத்தம் தொக்கு.
   
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
43. கடற் கோடு இரு மருப்பு, கால் பாகன் ஆக,
அடற் கோட்டு யானை திரையா, உடற்றி,
கரை பாய் நீள் சேர்ப்ப! கனை இருள் வாரல்!
வரைவாய், நீ, ஆகவே வா!
   
பகற்குறியிடம் காட்டியது
44. கடும் புலால் புன்னை கடியும் துறைவ!
படும் புலால் புள் கடிவான் புக்க, தடம் புல் ஆம்
தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில்,
ஏழை மான் நோக்கி இடம்.
   
தலைமகன் சொல்லிய குறி வழி அறிந்து, தலைமகளைக் கண்ட
பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது
45. தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல்,
மாழை நுளையர் மட மகள், ஏழை,
இணை நாடில் இல்லா, இருந் தடங் கண் கண்டும்,
துணை நாடினன்; தோம் இலன்!
   
தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது
46. தந்து, ஆயல் வேண்டா; ஓர் நாள் கேட்டு, தாழாது
வந்தால், நீ எய்துதல் வாயால் மற்று; எந்தாய்!
மறி மகர வார் குழையாள் வாழாள்; நீ வாரல்,
எறி மகரம் கொட்கும் இரா.
   
பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது
47. பண்ணாது, பண்மேல் தேன் பாடும் கழிக் கானல்,
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால்; எண்ணாது
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்
காவார், கயிறுரீஇ விட்டார்.
   
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
48. திரை மேல் போந்து எஞ்சிய தணெ் கழிக் கானல்
விரை மேவும் பாக்கம் விளக்கா, கரைமேல்,
விடுவாய்ப் பசும் புற இப்பி கால் முத்தம்
படு வாய் இருள் அகற்றும், பாத்து.
   
49. எங்கு வருதி, இருங் கழித் தண் சேர்ப்ப!
பொங்கு திரை உதைப்பப் போந்து ஒழிந்த சங்கு
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்;
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து?
   
தோழி வரைவு கடாயது
50. திமில் களிறு ஆக, திரை பறையா, பல் புள்
துயில் கெடத் தோன்றும் படையா, துயில்போல்
குறியா வரவு ஒழிந்து, கோல நீர்ச் சேர்ப்ப!
நெறியால் நீ கொள்வது நேர்.
   
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம்
அறியச் சொல்லியது
51. கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும்; பகர்தும்; அடும்பு எலாம்-
சாலிகைபோல் வலை சாலப் பல உணங்கும்;-
பாலிகை பூக்கும் பயின்று.
   
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
52. திரை பாகன் ஆக, திமில் களிறு ஆக,
கரை சேர்ந்த கானல் படையா, விரையாது-
வேந்து கிளர்ந்தன்ன வேலை நீர்ச் சேர்ப்ப!-நாள்
ஆய்ந்து, வரைதல் அறம்.
   
53. பாறு புரவியா, பல் களிறு நீள் திமிலா,
தேறு திரை பறையா, புள் படையா, தேறாத
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப! மற்று எமர்-
முன் கிளர்ந்து எய்தல் முடி!
   
54. வாராய்; வரின், நீர்க் கழிக் கானல் நுண் மணல்மேல்
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே; ஓர் இலோர்,
கோள் நாடல் வேண்டா; குறி அறிவார்க் கூஉய்க் கொண்டு, ஓர்
நாள் நாடி, நல்குதல் நன்று.
   
55. கண் பரப்ப காணாய், கடும் பனி; கால் வல் தேர்
மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு, மண் பரக்கு-
மாறு, நீர் வேலை! நீ வாரல்! வரின், ஆற்றாள்,
ஏறு நீர் வேலை எதிர்.
   
தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது
56. கடற் கானல் சேர்ப்ப! கழி உலா அய்நீண்ட
அடல் கானல் புன்னை, தாழ்ந்து, ஆற்ற, மடற் கானல்,
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து-எம்
முன்றில் இள மணல்மேல் மொய்த்து.
   
தோழி வரைவு கடாயது
57. வரு திரை தான் உலாம் வார் மணல் கானல்,
ஒரு திரை ஓடா அளவை, இரு திரை
முன் வீழும் கானல், முழங்கு கடல் சேர்ப்ப!
என் வீழல் வேண்டா, இனி.
   
தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது
58. மாயவனும் தம்முனும் போலே, மறி கடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ-கானல்
இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த
புடை எலாம், புன்னை;-புகன்று?
   
'இப்பொழுது வாரல்!' என்று, வரைவு கடாயது
59. பகல் வரின், கவ்வை பல ஆம்; பரியாது,
இர வரின், ஏதமும் அன்ன; புக அரிய
தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே,
ஏழை நுளையர் இடம்.
   
பாங்கற்குத் தலைமகன் கூறியது
60. திரை அலறிப் பேரத் தழெியாத் திரியா,
கரை அலவன் காலினால் காணா, கரை அருகே
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடுங் கண்ணினாள்,
மையல், நுளையர் மகள்.
   
தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது
61. அறிகு அரிது, யார்க்கும்-அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறி, திரிவார் இன்மையால், இல்லை-முறி திரிந்த
கண்டல், அம் தண் தில்லை கலந்து, கழி சூழ்ந்த
மிண்டல், அம் தண் தாழை, இணைந்து.
   
தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும்
நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று
ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
62. வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில்
நல்லார் விழவகத்தும், நாம் காணேம்;-நல்லாய்!-
உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச்
சுவர்க்கத்து உளராயின், சூழ்.