3. பாலைதலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது
63. எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
பொன் அணிந்த, கோங்கம்;-புணர் முலையாய்!-பூந்தொடித் தோள்
என் அணிந்த, ஈடு இல் பசப்பு?
   
64. ‘பேணாய், இதன் திறத்து!’ என்றாலும், பேணாதே
நாண் ஆய நல் வளையாய்! நாண் இன்மை காணாய்;
எரி சிதறி விட்டன்ன, ஈர் முருக்கு; ஈடு இல்
பொரி சிதறி விட்டன்ன, புன்கு.
   
சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் குரவொடு புலம்பியது
65. தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப,
ஈன்றாய் நீ பாவை, இருங் குரவே! ஈன்றாள்
மொழி காட்டாய் ஆயினும், முள் எயிற்றாள் சென்ற
வழி காட்டாய், ‘ஈது’ என்று, வந்து.
   
தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
66. வல் வரும்; காணாய்-வயங்கி, முருக்கு எல்லாம்,
செல்வர் சிறார்க்குப் பொற்கொல்லர்போல், நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொன்-தாலி பாஅய்த்
திகழக் கான்றிட்டன, தேர்ந்து!
   
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
67. வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்;
‘பொறுக்க!’ என்றால், பொறுக்கலாமோ?-ஒறுப்பபோல்
பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்;
என் உள் உறு நோய் பெரிது!
   
பொருள் வலித்த நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லிச் செலவு அழுங்கியது
68. சென்றக்கால், செல்லும் வாய் என்னோ?-இருஞ் சுரத்து
நின்றக்கால், நீடி ஒளி விடா,-நின்ற
இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இளமுலையாள் ஈடு இல்
குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு!
   
இடைச் சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது
69. அத்தம் நெடிய; அழற் கதிரோன் செம்பாகம்
அத்தம் மறைந்தான்; இவ் அணியிழையோடு, ஒத்த
தகையினால், எம் சீறூர்த் தங்கினிராய், நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு.
   
புணர்ந்து உடன் போய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக்
கொண்டு போவான், சொல்லியது
70. நின் நோக்கம் கொண்ட மான், தண் குரவ நீழல், காண்;
பொன் நோக்கம் கொண்ட பூங் கோங்கம் காண்;-பொன்நோக்கம்
கொண்ட சுணங்கு அணி மென் முலைக் கொம்பு அன்னாய்!-
வண்டல் அயர், மணல்மேல் வந்து!
   
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டார் சொல்லிய வார்த்தையைத் தாங்கள் கேட்டார்க்குச் சொல்லி ஆற்றுவித்தது
71. அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும், மாறு இலா
வெஞ் சுடர் நீள் வேலானும், போதரக் கண்டு, அஞ்சி,
‘ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக,
இரு சுடரும் போந்தன!’ என்றார்.
   
சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகளைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது
72. “முகம் தாமரை; முறுவல் ஆம்பல்; கண் நீலம்;
இகந்து ஆர் விரல் காந்தள்” என்று என்று, உகந்து இயைந்த
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல், வருந்தாதே,
ஏழைதான் செல்லும், இனிது.’
   
முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது
73. செவ் வாய், கரிய கண், சீரினால் கேளாதும்,
கவ்வையால் காணாதும், ஆற்றாதும், அவ் ஆயம்,
தார்த் தத்தை வாய் மொழியும், தண் கயத்து நீலமும்,
ஓர்த்து ஒழிந்தாள்-என் பேதை ஊர்ந்து.
   
காமம் மிக்க கழிபடர் கிளவி; நிலத்தான் பாலை;
ஒழுக்கத்தான் நெய்தல்
74. புன் புறவே! சேவலோடு ஊடல் பொருள் அன்றால்;
அன்பு உறவே உடையார் ஆயினும், வன்புற்-
றது காண்! அகன்ற வழி நோக்கி, பொன் போர்த்து,
இது காண், என் வண்ணம், இனி!
   
மகட் போக்கிய தாய் சொல்லியது
75. எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான்,
விரிந்து விடு கூந்தல் வெஃகா, புரிந்து
விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம்,
அடு திறலான் பின் சென்ற ஆறு.
   
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித்
தலைமகன் செலவு அழுங்கியது
76. நெஞ்சம்! நினைப்பினும், நெல் பொரியும் நீள் அத்தம்,
‘அஞ்சல்!’ என ஆற்றின், அஞ்சிற்றால்; அஞ்சி,
புடை நெடுங் காது உறப் போழ்ந்து அகன்று நீண்ட
படை நெடுங் கண் கொண்ட, பனி.
   
வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைந்த இடத்து, தலைமகள்
வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை
நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது
77. வந்தால்தான், செல்லாமோ-ஆர் இடையாய்!-வார் கதிரால்,
வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர்
தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி,
மகரக் குழை மறித்த நோக்கு?
   
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு,
'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
78. ஒரு கை, இரு மருப்பின், மும் மத, மால், யானை
பருகு நீர் பைஞ் சுனையில் காணாது, அருகல்,
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்,
அழிவிலர் ஆக, அவர்!
   
பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
79. சென்றார் வருதல், செறிதொடி! சேய்த்துஅன்றால்;
நின்றார் சொல் தேறாதாய், நீடு இன்றி, வென்றார்
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும்
கடுத்த மலை நாடு காண்!
   
80. உருவ வேல் கண்ணாய்! ஒரு கால் தேர்ச் செல்வன்
வெருவ, வீந்து உக்க நீள் அத்தம், வருவர்,
சிறந்து பொருள் தருவான் சேட் சென்றார் இன்றே;
இறந்து கண், ஆடும் இடம்.
   
தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனம் கண்டு,
ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; சுரத்திடைச் சென்ற
செவிலித்தாய் சொல்லியதூஉம் ஆம்
81. கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! வாடினீர்;
நின்றேன் அறிந்தேன்; நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு
என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாட்கு, என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாள்-
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு?
   
தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத்
தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது
82. ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப்
பூண் கடனாப் போற்றிப் புரிந்தமையால், பூண் கடனாச்
செய் பொருட்குச் செல்வரால்;-சின்மொழி!-நீ சிறிது
நை பொருட்கண் செல்லாமை நன்று.
   
தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள்
உடன்படாது சொல்லியது
83. செல்பவோ? சிந்தனையும் ஆகாதால்; நெஞ்சு எரியும்;
வெல்பவோ, சென்றார் வினை முடிய?-நல்லாய்!
இதடி கரையும்; கல் மா போலத் தோன்றும்;
சிதடி கரையும், திரிந்து.
   
84. கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட,
தள்ளியும் செல்பவோ, தம்முடையார்-கொள்ளும்
பொருள் இலர் ஆயினும், பொங்கெனப் போந்து எய்யும்
அருள் இல் மறவர் அதர்?
   
தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது
85. ‘பொருள் பொருள்’ என்றார் சொல் பொன் போலப் போற்றி,
அருள் பொருள் ஆகாமை ஆக; அருளான்,
வளமை கொணரும் வகையினான், மற்று ஓர்
இளமை கொணர இசை!
   
தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது
86. ஒல்வார் உளரேல், உரையாய்!-'ஒழியாது,
செல்வார்’ என்றாய்; நீ சிறந்தாயே!-செல்லாது
அசைந்து ஒழிந்த யானை, பசியால், ஆள் பார்த்து,
மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து.
   
புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள்
உடன்பட்டுச் சொல்லியது
87. ஒன்றானும் நாம் மொழியலாமோ-செலவு தான்
பின்றாது, பேணும் புகழான் பின்;-பின்றா
வெலற்கு அரிதாம் வில் வலான், வேல் விடலை, பாங்காச்
செலற்கு அரிதாச் சேய சுரம்?
   
புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
88. அல்லாத என்னையும் தீர, மற்று ஐயன்மார்
பொல்லாதது என்பது நீ பொருந்தாய், எல்லார்க்கும்,
வல்லி ஒழியின்,-வகைமை நீள் வாட் கண்ணாய்!
புல்லி ஒழிவான், புலந்து.
   
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும்
கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது
89. நண்ணி, நீர் சென்மின்; நமர் அவர் ஆபவேல்,
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ, எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம்,
தண்சுடர் அன்னாளை, தான்.
   
'தன்னும் அவனும்' என்பதனுள், 'நன்மை தீமை' என்பதனால்,
நற்றாய் படிமத்தாளை வினாயது
90. வேறாக நின்னை வினவுவேன்; தெய்வத்தான்
கூறாயோ? கூறும் குணத்தினனாய், வேறாக-
என் மனைக்கு ஏறக் கொணருமோ?-எல்வளையைத்
தன் மனைக்கே உய்க்குமோ, தான்?
   
தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது
91. கள்ளி, சார், கார் ஓமை, நார் இல் பூ நீள் முருங்கை,
நள்ளிய வேய், வாழ்பவர் நண்ணுபவோ-புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து, ஆண்டு,
இருந்து உறங்கி, வீயும் இடம்?
   
92. செல்பவோ, தம் அடைந்தார் சீர் அழிய-சிள் துவன்றி,
கொல்பபோல் கூப்பிடும்; வெங் கதிரோன் மல்கி,
பொடி வெந்து, பொங்கி, மேல் வான் சுடும்; கீழால்
அடி வெந்து, கண் சுடும்;-ஆறு?