5. மருதம்பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
124. செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்
இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே
ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்
கூடினான், பின் பெரிது கூர்ந்து.
   
125. மாக் கோல் யாழ்ப் பாண்மகனே! மண் யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன்,-தூக் கோல்
தொடி உடையார் சேரிக்குத் தோன்றுமோ,-சொல்லாய்!-
கடி உடையேன் வாயில் கடந்து?
   
126. விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;
முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,
பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,
ஆங்கண் அறிய உரை.
   
127. மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை
எங்கட்கு உரையாது, எழுந்து போய், இங்கண்
குலம் காரம் என்று அணுகான்; கூடும் கூத்து என்றே
அலங்கார நல்லார்க்கு அறை.
   
[இது முதல் துறைக் குறிப்புகள் ஏடுகளில் கிடைக்கப்பெறவில்லை.]
128. செந்தாமரைப் பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந் தார், புனல்வாய்ப் பாய்ந்து ஆடுவாள், அம் தார்
வயந்தகம்போல், தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று.
   
129. வாடாத தாமரைமேல் செந்நெல் கதிர் வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன்
நல் அகம் சேராமை நன்று.
   
130. இசை உரைக்கும், என் செய்து? இர நின்று அவரை;
வசை உரைப்பச் சால வழுத்தீர்; பசை பொறை
மெய்ம் மருட்டு ஒல்லா-மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டுப் பெற்ற பொழுது.
   
131. மடங்கு இறவு போலும் யாழ்ப் பண்பு இலாப் பாண!
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா; முடங்கு இறவு
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய்
கேட்டு உற்ற, கீழ் நாள், கிளர்ந்து.
   
132. எங்கையர் இல் உள்ளானே பாண! நீ பிறர்
மங்கையர் இல் என்று மயங்கினாய்; மங்கையர் இல்
என்னாது இறவாது, இவண் நின் நி .........
பின்னார் இல் அந்தி முடிவு.
   
133. பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு
மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்
செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு
நையும் இடம் அறிந்து, நாடு.
   
134. கிழமை பெரியோர்க்குக் கேடு இன்மைகொல்லோ?
பழமை பயன் நோக்கிக் கொல்லோ? கிழமை
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா,
அடி நாயேன் பெற்ற அருள்.
   
135. என் கேட்டி ஏழாய்! இரு நிலத்தும் வானத்தும்,
முன் கேட்டும் கண்டும், முடிவு அறியேன்; பின் கேட்டு,
அணி இகவா நிற்க, அவன் அணங்கு மாதர்
பணி இகவான், சாலப் பணிந்து.
   
136. எங்கை இயல்பின் எழுவல்; யாழ்ப் பாண் மகனே!
தம் கையும் வாயும் அறியாமல், இங்கண்
உளர உளர, உவன் ஓடிச் சால,
வளர வளர்ந்த வகை.
   
137. கருங் கோட்டுச் செங் கண் எருமை, கழனி
இருங் கோட்டு மென் கரும்பு சாடி, வரும் கோட்டால்
ஆம்பல் மயக்கி, அணி வளை ஆர்ந்து, அழகாத்
தாம் பல் அசையின, வாய் தாழ்ந்து.
   
138. கன்று உள்ளிச் சோர்ந்த பால் கால் ஒற்றி, தாமரைப்பூ
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான், சென்று உள்ளி,
‘வந்தையா!’ என்னும் வகையிற்றே-மற்று இவன்
தந்தையார் தம் ஊர்த் தகை.
   
139. மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல்,
எருதோடு உழல்கின்றார் ஓதை, குருகோடு
தாராத் தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே-
ஊராத் தேரான் தந்தை ஊர்.
   
140. மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று
உண்ணாப் பூந் தாமரைப் பூ உள்ளும்;-கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்,
மயல் ஊர் அரவர் மகள்.
   
141. அணிக் குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன,
மணிக் குரல்மேல் மாதராள் ஊடி, மணிச் சிரல்
பாட்டை இருந்து அயரும் பாய் நீர்க் கழனித்தே-
ஆட்டை இருந்து உறையும் ஊர்.
   
142. தண் கயத்துத் தாமரை, நீள் சேவலைத் தாழ் பெடை
புண் கயத்து உள்ளும் வயல் ஊர! வண் கயம்
போலும் நின் மார்பு, புளி வேட்கைத்து ஒன்று; இவள்
மாலும் மாறா நோய் மருந்து.
   
143. நல் வயல் ஊரன் நறுஞ் சாந்து அணி அகலம்
புல்லி, புடை பெயரா மாத்திரைக்கண், புல்லியார்
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப,
பாட்டு முரலுமாம், பண்.
   
144. அரத்தம் உடீஇ, அணி பழுப்பப் பூசி,
சிரத்தையால் செங்கழுநீர் சூடி, பரத்தை
நினை நோக்கிக் கூறினும், ‘நீ மொழியல்’ என்று,
மனை நோக்கி, மாண விடும்.
   
145. பாட்டு அரவம், பண் அரவம், பணியாத
கோட்டு அரவம், இன்னிவை தாம் குழும, கோட்டு அரவம்
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன, மகச் சுமந்து,
இந்திரன்போல் வந்தான், இடத்து.
   
146. மண் கிடந்த வைய.... மற்றுப் பெரியராய்
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக, பெண் கிடந்த
தன்மை ஒழிய, தரள முலையினாள்
மென்மை செய்திட்டாள், மிக.
   
147. செங் கண் கருங் கோட்டு எருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம் பாய்ந்து, அங்கண்
குவளை அம் பூவொடு செங் கயல் மீன் சூடி,
தவளையும் மேற்கொண்டு வரும்.
   
148. இருள் நடந்தன்ன இருங் கோட்டு எருமை,
மருள் நடந்த மாப் பழனம் மாந்திப்-பொருள் நடந்த
கல் பேரும் கோட்டால் கனைத்து, தம் கன்று உள்ளி,
நெல் போர்வு சூடி வரும்.
   
149. புண் கிடந்த புண்மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும்,
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ........ கிடந்து
செய்யாத மாத்திரையே, செங் கயல்போல் கண்ணினாள்
நையாது தான் நாணுமாறு.
   
150. கண்ணுங்கால் என்கொல்? கலவை யாழ்ப் பாண் மகனே!
எண்ணுங்கால், மற்று இன்று; இவெளாடு நேர் எண்ணின்,
கடல் வட்டத்து இல்லையால்; கல் பெயர் சேராள்;
அடல் வட்டத்தார் உளரேல் ஆம்.
   
151. சேறு ஆடும் கிண்கிணிக் கால் செம் பொன் செய் பட்டத்து,
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா; வேறு ஆய
மங்கையர் இல் நாடுமோ?-மாக் கோல் யாழ்ப் பாண் மகனே!-
எங்கையர் இல் நாடலாம் இன்று.
151
   
152. முலையாலும், பூணாலும், முன்கண் தாம் சேர்ந்த
விலையாலும், இட்ட குறியை உலையாது
நீர் சிதைக்கும் வாய்ப் புதல்வன் நிற்கும், முனை; முலைப்பால்
தார் சிதைக்கும்; வேண்டா, தழூஉ.
152
   
153. துனி, புலவி, ஊடலின் நோக்கேன்; தொடர்ந்த
கனி கலவி காதலினும் காணேன்; முனிவு அகலின்,
நாணா நடுக்கும்; நளி வயல் ஊரனைக்
காணா, எப்போதுமே, கண்.
153