21. இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது,-பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் விதி.
   
22. வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான்,
ஆள் அஞ்சான், ஆய் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக்
காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய
பாலின் நூல் எய்தப்படும்.
   
23. குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;
மனம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்;-
கால் காப்பு வேண்டான்,-பெரியார் நூல் காலற்கு
வாய் காப்புக் கோடல் வனப்பு.
   
24. பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்,
நிரம்புமேல், வீட்டு நெறி.
   
25. பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால் நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும்.
   
26. மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன் கண்மை,
ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால்,-தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்.
   
27. அஃகு, நீ, செய்யல், என அறிந்து, ஆராய்ந்தும்,
வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான்,
கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர்!
   
28. மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்!-
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே,
குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்
மறலையின் வாயினவாம், மற்று.
   
29. நிலை அளவில் நின்ற நெடியவர்தாம் நேரா,
கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை;-அலை அளவி,
மை என நீள் கண்ணாய்!-மறுதலைய இம் மூன்றும்
மெய் அளவு ஆக விதி!
   
30. மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்
பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால்,-பூண்ட
ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,கிரிதன், பௌநற்பவன், பேர்.