51. உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான்-பண் நீர
பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து.
   
52. இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர்-பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து.
   
53. கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார்-மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று.
   
54. பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
நீண்டாரால் எண்ணாது நீத்தவர்-மண் ஆண்டு,
பண்டாரம் பற்ற வாழ்வார்.
   
55. ‘ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
மான்றார், வளியால் மயங்கினார்க்கு, ஆனார்!’ என்று,
ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார்-பெருஞ் செல்வம்-
காண் ஈய்த்து வாழ்வார், கலந்து.
   
56. தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர்,
உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய்-
மா அலந்த நோக்கினாய்!-ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ்
நாவலம் தீவு ஆள்வாரே, நன்கு.
   
57. கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்
பெருஞ் சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்
ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார்-அரசராய்ப்
போற்றி ஊண் உண்பார், புரந்து.
   
58. காமாடார், காமியார், கல்லார் இனம் சேரார்,
ஆம் ஆடார், ஆய்ந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்
மாற்றாரை மாற்றி வாழ்வார்.
   
59. வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான்-பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.
   
60. பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,
அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,
பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,
சாபம்போல் சாரும், சலித்து.