61. ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,
ஓர்வமே, செய்யும் உலோபமே, சீர் சாலா
மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே-
ஊனமே தீர்ந்தவர் ஓத்து.
   
62. கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஓத்தும்
ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கும் இழவும் தரும்.
   
63. ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,
பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு
கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார்-இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார், விரிந்து.
   
64. உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார்-
பெருந் தவம் செய்தார், பெரிது.
   
65. காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த
பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா,
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்,
ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து.
   
66. பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின்,-மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று.
   
67. கூர் அம்பு, வெம் மணல், ஈர் மணி, தூங்கலும்,
ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து,
அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார்-
இழி கதி, இம் முறையான் ஏழு.
   
68. சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென் புடையார் வைத்தார், விரித்து.
   
69. எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர்-
வேறு தொழிலாய் விரித்து.
   
70. ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்
வானும் வரிசையால்தான் ஆளும்-நாளுமே,
ஈனமே இன்றி இனிது.