கைந்நிலை
(புல்லங்காடனார்)

1. குறிஞ்சி

[1 முதல் 17 வரை துறைக்குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை]
1. நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் மம...... சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று,
மேனி சிதையும், பசந்து.
   
2. வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்?-தோழி!-என்
நெஞ்சம் நடுங்கி வரும்!
   
3. பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர்
காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும்,
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு
ஆசையின் தேம்பும், என் நெஞ்சு.
   
4. ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய
தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளாத் தகையனோ,-நேரிழாய்!-
தேம் கலந்த சொல்லின் தெளித்து?
   
5. இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள்
நிரையம் எனக் கிடந்தவாறு!
   
6. மரையா உகளும் மரம் பயில் சோலை,
உரை சால் மட மந்தி ஓடி உகளும்
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம்
உரையா வழங்கும், என் நெஞ்சு.
   
7. கல் வரை ஏறி, கடுவன் கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு,
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல, சொரியும், வளை.
   
8. கருங் கைக் கத வேழம் கார்ப் பாம்புக் குப்பங்
கி... க் கொண்...........................கரும்
பெருங் கல் மலை நாடன் பேணி வரினே,
சுருங்கும், இவள் உற்ற நோய்.
   
9. காந்தள் அரும் பகை என்று, கத வேழம்
ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி,
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன்
காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு?
   
10. பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன்,
மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள்
இன்னே வரும்கண்டாய்-தோழி!-இடை யாமத்து
என்னை இமை பொருமாறு?
   
11. எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறி கிளர் நல் மலை நாடன் வருமே-
அறி துறைத்து, இவ் அல்லில் நமக்கு.
   
12. நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி,
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக,
‘முடியும்கொல்?’ என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி, வரும்.