4. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
37. கழனி உழவர் கலி அஞ்சி ஓடி,
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர்,
பொழெனப் பொய் கூறாது, ஒழி.
   
பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து,
தலைமகள் சொல்லியது
38. கயல் இனம் பாயும் கழனி நல் ஊர!
நயம் இலேம்; எம் மனை இன்றொடு வாரல்;
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்,
குயில்... ... ... கொண்டு.
   
[இதன் துறைக்குறிப்பு மறைந்துபட்டது.]
39. முட்ட முது நீர் அடை கரை மேய்ந்து எழுந்து,
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டு, எம் இல்
சுட்டி அலைய வரும்.
   
வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
40. தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும், ‘வரும்’ என்று, சேரி
புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள்
கலப்புஅடும்; கூடும்கொல் மற்று?
   
வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது
41. பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை?
அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி
நெறியின்,-இனிய சொல் நீர் வாய் மழலைச்
சிறுவன் எமக்கு உடைமையால்.
   
42. நீத்த நீர் ஊரன் நிலைமையும், வண்ணமும்,
யார்க்கு உரைத்தி-பாண! அதனால் யாம் என் செய்தும்?
கூத்தனாக் கொண்டு, குறை நீ உடையையேல்,
ஆட்டுவித்து உண்ணினும் உண்.
   
43. போது அவிழ் தாமரைப் பூந் துறை ஊரனைத்
தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்;
ஏதின்மை சொல்லி இருப்பர், பிறர் மகளிர்,
பேதைமை தம்மேலே கொண்டு.
   
[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]
44. தண் துறை ஊரன்,-தட மென் பணைத் தோளாய்!-
‘வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து,
கோல வன முலையும் புல்லினான்’ என்று எடுத்து,
சாலவும் தூற்றும், அலர்.
   
45. மூத்தேம், இனி;-பாண!-முன்னாயின், நாம் இளையேம்;
கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப்
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி,
நீத்தல் அறிந்திலேம், இன்று.
   
46. கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்,
நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;-
பயம் இல் யாழ்ப் பாண!-பழுது ஆய கூறாது,
எழு நீ போ, நீடாது மற்று.
   
47. அரக்கு ஆம்பல், தாமரை, அம் செங்கழுநீர்,
ஒருக்கு ஆர்ந்த வல்லி, ஒலித்து ஆரக் குத்தும்
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய்,-பாண!-
இருக்க, எம் இல்லுள் வரல்.
   
48. கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வன முலை புல்லான், பொலிவு உடைத்தா;-
தக்க யாழ்ப் பாண!-தளர் முலையாய் மூத்து அமைந்தார்
உத்தரம் வேண்டா; வரல்.