[கோவலனும்
கண்ணகியும் வைகறை யாமத்தே பிறரறியாதபடி புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின்
சங்கமுகத் துறையையும் கழிந்து, வடகரை வழியாகச் சோலைகளினூடே மேற்றிசை நோக்கிச்
சென்று ஒருகாத தூரங் கடந்து, கவுந்தியடிகளின் தவப் பள்ளியிருக்கும் சோலையை அடைந்தனர்.
அப்பொழுது மெல்லியலாகிய கண்ணகி இடையும் அடியும் வருந்திக் குறுக வுயிர்த்து, 'மதுரை
மூதூர் யாதோ' என வினாவ, 'நம் நாட்டிற்கு அப்பால் ஆறைங்காதமே ; அணியதுதான்' என்று
கூறிக் கோவலன் நகுதல் செய்து, சிறையகத்திருந்த ஆருகத சமயத் தவ முதியாளாகிய கவுந்தியைக்
கண்டு அடிதொழுது, தாங்கள் மதுரைக்குச் செல்வதனைக் கூற, அவளும் மதுரையிலுள்ள பெரியோர்பால்
அறவுரை கேட்டற்கும் அறிவனை ஏத்தற்கும் ஒன்றிய உள்ளமுடையேன் ஆதலின் யானும் போதுவல்
என்று கூறி உடன்வர, மூவரும் குடதிசையில் வழிக்கொண்டு பலவகை வளங்களையும் ஒலிகளையும்
கண்டும் கேட்டும் அவலந் தோன்றாது ஆர்வ நெஞ்சமுடன் நாடோறும் காவதமல்லது கடவாராகி
இடையிடையே பலநாள் தங்கிங் செல்வுழி ஒருநாள் ஆற்றிடைக் குறையாகிய சீரங்கத்தை
அடைந்தனர். அடைந்தவர், அங்குள்ளதோர் சோலைக்கண் வந்தெய்திய சாரணரைத் தொழுது,
அவர் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டுக் கவுந்தியடிகள் அருகதேவனை ஏத்திய பின்னர்,
மூவரும் ஓடத்திலேறிக் காவிரியின் தென்கரையை அடைந்து ஓர் பூம்பொழிலில் இருந்துழி,
அவ்வழிப் போந்த ஓர் பரத்தையும் தூர்த்தனும் கண்ணகியையும் கோவலனையும் நோக்கி
அடாத சொற் கூறி இகழ்ந்தனராகலின் கவுந்தியடிகள் அவர்களை நரிகளாகுமாறு சபித்துக்,
கோவலனும் கண்ணகியும் அவர்கட்கிரங்கி வேண்ட, அவர்களெய்திய சாபம் ஓராண்டில் நீங்குமாறு
அருள் செய்தனர். பின்பு மூவரும் உறையூரை அடைந்தனர். (இக்காதையில் கோவலன் கண்ணகியை
நோக்கிக் கவுந்தியடிகள் வழி கூறும் வாயிலாகச் சோணாட்டின் மருதவளமாண்பனைத்தும்
அழகுபெறக் கூறப்பட்டுள்ளன. சாரணரும் கவுந்தியடிகளும் அருகதேவனையேத்தும் உரைகளும் அறிந்து
இன்புறற்பாலன.)]
|