|
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாட் கங்குல்
|
|
வான்கண்
விழியா வைகறை யாமத்து - உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய
யாமத்தின்கண், மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்க - மீன் விளங்கும் வானத்தினின்றும்
வெள்ளிய திங்கள் நீங்கிற்றாக, கார் இருள் நின்ற கடை நாட் கங்குல் - கரிய இருள்
இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில் ;
வான்கண் - சிறந்தகண் ; காண்டற்குக்
கருவியாகிய கண்ணொளியினும் காணப்படும் பொருளினும் ஞாயிற்றினொளி கலப்பினன்றி ஒன்றையும்
காணலாகாமையின், அதனைச் சிறந்த கண் என்றார். இனி, வான்கண் - விசும்பின் கண்ணாகிய
ஞாயிறு என்றுமாம் ; 1
"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக, இயங்கிய விருசுடர் கண்ணென" என்றார் பிறரும். இறைவன்
கண்ணென்பாருமுளர். தோன்றாத என்பதனைக் கண் என்றதற்கேற்ப விழியா என்றார். இருள்
கடைநின்ற என மாறுக. இதனால் பூருவபக்கமென்பதாயிற்று.
ஈண்டு அடியார்க்கு நல்லார், அந்தச்
சித்திரைத் திங்கட் புகுதி நாள் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாம் பக்கமும் சோதியுமாம்
என்றும், அத் திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற் கொடி
யேற்றி இருபத்தெட்டு நாளும் விழா நடந்த தென்றும், வைகாசி இருபத்தெட்டிலே முற்பக்கத்தின்
பதின்மூன்றாந் திதியும் திங்கட்கிழமையும் கூடிய அனுடத்தில் கடலாடினரென்றும், வைகாசி
இருபத்தொன்பதில் முற்பக்கத்தின் பதினாலாந் திதியில் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும்
பெற்ற நாசயோகத்தில் வைகறைப் பொழுதினிடத்து நிலவு பட்ட அந்தரத் திருளிலே கோவலன்
மதுரைக்குப் புறப்படலாயினன் என்றும் கூறுகின்றார். அவர், 2
"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என முன்னரும்,3
"ஆடித் திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத்
தொள்ளெரி யுண்ண, உரைகால் மதுரையோ டரசுகேடுறுமெனும், உரையு முண்டே" எனப் பின்னரும்
போந்த குறிப்புக்களையும், மணிமேகலையில் 4
"மேலோர் விழைய விழாக்கோளெடுத்த, நாலேழ் நாளினும்" 5
"தேவரு மக்களு மொத்துடன் றிரிதரும், நாலேழ் நாளினும்" எனக் கூறப்பட்டிருப்பவற்றையும்
பற்றுக் கோடாகக் கொண்டும், கோவலன் புறப்பட்ட நாள் தீயதாகல் வேண்டுமென்னும் கருத்துடனும்
இவ்வாறு ஊகித்தெழுதினாராவர். ஆயின், இவையெல்லாம் கணிதமுறையுடன் கூடிய உண்மைகளெனத்
துணிதல் சாலாது. வைகாசித் திங்களில் முற்பக்கத்தின் பதின்மூன்றாந் திதியும் அனுடமும்
கூடுதலென்பதே இயற்கையன்றாகும். இவையெல்லாம் ஆராய்ந்து துணிதற்குரியன.
|
1.
புறம் .365. 2
.சிலப் . 5;64. 3.
சிலப். 23: 133-7. 4.
5. மணிமே. 1:
7-8; 66-7.
|
|
|