35
40
|
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
|
|
|
தாலப் புல்லின் வால்வெண் தோட்டு - பனையாகிய புல்லினது மிக வெள்ளிய ஓலையினால்,
கைவல் மகடூஉ கவின் பெறப் புனைந்த - கைத்தொழில் வல்ல மகள் அழகு பெறச் செய்த, செய்
வினைத் தவிசில் செல்வன் இருந்தபின் - தொழிற் பாடமைந்த தவிசின்கண் கோவலன் அமர்ந்த
பின்னர், கடி மலர் அங்கையிற் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
- சுட்ட மண்கலங் கொண்டு காதலன் அடிகளைக் கழுவிய நீரை விளக்கமமைந்த மலர் போலும்
அகங்கையால் வணங்கி மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப் பனள்போல் - நிலமடந்தையினது
மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி - தனது கையினால்
குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து ஈங்கு அமுதம்
உண்க அடிகள் ஈங்கு என - ஈனாத வாழையின் குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து
அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல ;
பனை புறக்காழ்த்து ஆகலான் புல் எனப்பட்டது.
தவிசு - தடுக்கு எனப்படும். அகம்+கை - அங்கை. அடிநீர் - அடியைக் கழுவியநீர். சுடுமண்
மண்டை என்ற குறிப்பு இவள் முன்பெல்லாம் பொன், வெள்ளி முதலியவற்றானாய கலங்களை வழங்கினாள்
என்பதுணர்த்தி நின்றது. தொழுதனள் - முற்றெச்சம். மண்ணக மடந்தைக்கு மயக்கம் இவர்க்கு
மேல் வரும் தீங்கு நோக்கி உண்டாயது என்க. இனி மயக்கம் - அனந்தல் எனவுமாம். குமரி
வாழை - ஈனாத தலை வாழை. ஈங்கு இரண்டனுள் ஒன்று அசை.
ஆக்கி, இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து
அமுதம் உண்கவென என்க. |
|
|