பக்கம் எண் :

1 

மூலமும் உரையும்

1. கடவுள் வாழ்த்து

1 மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சோதுமன்றே.

   (இதன் பொருள்.) தேவாதி தேவன் - வானவர்கட்கு முதலான வானவன் என்பான் ; மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த- முடிவும் தோற்றமும் இல்லாத மூன்றுலகமும் போற்ற; தாவாத இன்பம் தலையாயது - கெடாத இன்பம் தனக்கு ஒப்பற்றதனை; தன்னின் எய்தி ஓவாதுநின்ற - தன்னாற் பெறுவதனால் தன்னைவிட்டு நீங்காது நின்ற; குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப - பண்புகளை உடையவனாகிய சிறந்த நிதியை உடைய செல்வன் என்று பெரியோர் கூறுவர்; (ஆகையால்) அவன் சேஅடி சேர்தும் - (யாமும் இவ்விலக்கியம் இனிது முடிய) அவன் செவ்விய திருவடிகளை வணங்குவோம்.

(விளக்கம்) ஒண்ணிதிச் செல்வன் - வீடாகிய விளங்கிய நிதியை உடைய செல்வன். குணம் : எண் குணங்கள். அவை : தாவாத இன்பம் என்பதனாற் பெறப்பட்ட வரம்பிலா இன்பம் நீங்கலாக உள்ள வரம்பிலா அறிவு, வரம்பிலா ஆற்றல், வரம்பிலாக்காட்சி, பெயரின்மை, மரபின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு என்பனவாம்.

   இஃது அருகசரணம் சித்தசரணம் சாதுசரணம் தன்மசரணம் என்னும் நான்கனுட் சித்தசரணம்.

   சித்த சரணம் - சித்தனை வணங்கும் வணக்கம். சித்தன் : காதி அகாதி என்னும் இருவகைக் கருமங்களையும் வென்று, அக்கினி யிந்திரனால் உடம்பைத் துறந்து, பரிநிர்வாணம் பெற்று மூவுலகத்து உச்சியில் இருப்பவன்.