பக்கம் எண் :

பதிகம் 10 

கோன்போல் அவன் கொண்டு வளர்த்த ஆறும் - கொலையுண்ட சச்சந்தன் வளர்த்தல்போலக் கந்துக்கடன் உளம்கொண்டு வளர்த்தபடியும் ; வாள்உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற ஆறும் - வாளனைய கண்ணாளாம் விசயை தன் மகன் வாழ்க என்று நோற்றபடியும்;

 

   (வி - ம்.) 'நாள் உற்று' என்பதற்கு 'நல்ல நாள் உற்று' என்றும் பொருள் கொள்ளலாம். தோள் -கை. உற்று : உவம வாசகம் (உவம உருபு). 'செப்புற்ற கொங்கை' (சிற்-354) என்றார் பிறரும். 'ஒழியாது' (தொல் - தொகை-15) என்னும் இலேசால் 'கோனை' என்னும் (இரண்டன்) உருபு தொக்கது. கதையை உட்கொண்டு அவன் என்பது கந்துக்கடனைச் சுட்டியது. அரசன் இறத்தற்கு ஏதுவாகலின் ஈண்டும் 'வாளுற்ற கண்' என்றார். வாழ்க : வியங்கோள் : இறுதி அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. கூனி : விசயையின் தோழியான சண்பகமாலை. நோன்பு : வேட்கையுள்ளது.

( 5 )
11 நெஞ்சம் புணையாக் கலைமாக்கட னீந்தி யாங்கே
வஞ்சம் மறவா நிரைவள்ளல் விடுத்த வாறும்.
விஞ்சைக் கிறைவன் மகள்வீணையிற் றோற்ற வாறு,
நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்த வாறும்,

   (இ - ள்.) வள்ளல் நெஞ்சம் புணையாக் கலை மாக்கடல் நீந்தி - சீவகன் தன் நெஞ்சு தெப்பமாகக் கலைகளாகிய கடலைக் கடந்து ; ஆங்கே வஞ்சம் மறவர் நிரை விடுத்த ஆறும் -அப்பொழுதே வஞ்சமுடைய வேடர்கொண்ட ஆனிரையை மீட்டபடியும் ; விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற ஆறும் - கலுழவேகன் மகளாகிய தத்தை யாழ்ப்பாடலிலே தோற்ற படியும் ; நஞ்சு உற்ற காமம் நாகரின் நனிதுய்த்த ஆறும் - உளம் நைந்து இருதலையும் ஒத்த காமத்தை நாகரைப் போலச் சாலவும் நுகர்ந்த படியும் ;

 

   (வி - ம்.) கற்றபொழுதே பயன் கொள்ளுதல் அருமையாதலின் 'ஆங்கே' என்றார். மறவரைக் கொல்லாது உயிர் வழங்குதலின் 'வள்ளல்' என்றார். விஞ்சை : குணப் பண்பு. அது பண்பாகு பெயராக விஞ்சையரை உணர்த்தியது. விஞ்சையர்க்கு இறைவன் கலுழவேகன். ஒரு மகளை வென்றான் என்பது இவன் தலைமைக்கு இழிவென உன்னி அவள் செயலாகக் கூறினார். நாகர் : யவணதேவர் என அருக நூல்கள் கூறும் ஓருடம்பாதலும் நீங்கல் வன்மையும்பற்றி உவமையாயினர். நஞ்சு - நைந்து : போலி.

( 6 )
12 முந்நீர்ப் படுசங் கலறம்முர சார்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுட் டேங்கொள் சுண்ண
மைந்நீர் நெடுங்க ணிருமங்கையா தம்முண் மாறா
யிந்நீர்ப் படியே மிவை தோற்றன மென்ற வாறும்,