பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1017 

உண்டாக்கிக் கொள்வதாலே படைக்கலங்கள் மேய்ந்து குறை கிடந்த எச்சிலாகிய, மலையனைய மார்பன் புத்திசேனன் என்பான்; இவன் தேசு உரைப்பின் இளைப்பல் - இவன் புகழைக் கூறின் இளைப்பேன்.

   (வி - ம்.) 'வளைத்து' என்பது பாடமாயின் சூழ்ந்து என்க. இவன் படைத் தலைவன். நச்சினார்க்கினியர் வரைமார்பனைச் சச்சந்தனாக்கி அவனுடைய அந்தணன் அசலன் எனக் கூட்டுவர்

( 234 )
1791 செட்டிதன பாலன்மனை யாள்சினவு வாட்கட்
பட்டநுதன் மின்னினகு பவித்திரைக்குத் தோன்றி
மட்டுமலர் மார்பின்மத யானையெயி றுழுதாங்
கிட்டகுறி தார்திவளப் பதுமுகனிவ் விருந்தோன்.

   (இ - ள்.) செட்டி தனபாலன் மனையாள் - (அரசற்குரிய) செட்டியாகிய தனபாலன் மனையாளாகிய; பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்குத் தோன்றி - பட்டம் நெற்றியிலே மின்போல ஒளி செயும் பவித்திரைக்கு மகனாகி; மட்டுமலர் மார்பின் மதயானை எயிறு உழுது ஆங்கு இட்டகுறி தார் திவள - தேனையுடைய மலரணிந்த மார்பினில் மதகளிற்றின் கொம்பு உழுது ஆங்கே அமைத்த குறியும் தாரும் விளங்க; இவ்விருந்தோன் பதுமுகன் - இங்கிருந்த இவன் பதுமுகன் எனப் படுவோன்.

   (வி - ம்.) நுதலிலே மின்போலப் பட்டம் நகுமென்னும் பெயரெச்சம் பவித்திரை யென்னும் நிலப்பெயர் கொண்டது; 'அரவம் புன்சடைமிடைந்த - மின்னனையான்' (சிற். 125) போல.

( 235 )
1792 பொன்னகருள் வேந்தன்பெய ராற்பொறியும் பெற்றான்
வின்மரிய தோள்விசய தத்தனுயிர்க் கவசம்
பின்னரிய கற்பினவள் பிரீதிமதி காதற்
றன்மகனென் யானடிக டேவதத்த னென்பேன்.

   (இ - ள்.) அடிகள்! - அடிகளே!; பொன் நகருள் வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான் - அந்த அழகிய நகரிலே அரசன் பெயராற் பட்டமும் பெற்றவன்; உயிர்க்கவசம் - அரசன் உயிருக்குக் கவசம் போன்றவன்; வில் மரிய தோள் விசய தத்தன் - வில் பொருந்திய தோளையுடைய விசயதத்தன் என்னும் இயற்பெயரினன்; பின்னரிய கற்பினவள் பிரீதிமதி - மகளிரால் மதித்தற்கரிய கற்பினையுடைய பிரீதிமதி; காதல் தன் மகனென் - அவளுடைய காதல் மகனேன் ஆகிய; யான் தேவதத்தன் என்பேன் - யான் தேவதத்தன் என்னும் பெயரையுடையேன்.