பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1020 

   (இ - ள்.) கந்துக்கடன் என்ற - கந்துக்கடன் என்றழைக்கப்படுகின்றவனும்; நகர்க்கு ஆதி முது நாய்கன் - இராசமாபுரத்திலே முதன்மை பெற்ற முதிய நாய்கனுமாகியவன்; முந்திப் பெறப்பட்ட மகன் - முதலிற் பெற்ற மகன்; மூரிச் சிலைத் தடக்கை - பெருமைமிக்க வில்லேந்திய பெருங்கையையுடைய; சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் - நினைப்பவர்களின் துன்பத்தை நீக்கும் சீவகன் எனப்படுவோன்; என் தோழன் அவனை - என் தோழனாகிய அவனை; அரசன் ஒருநாள் ஒரு தவற்றால் - கட்டியங்காரனாகிய மன்னன் ஒருநாள் அவனுடைய பிழையாலேயே.

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   கந்துக்கடன் என்ற நாய்கன், நகர்க்கு ஆதிநாய்கன், முதுநாய்கன் எனத் தனித்தனி கூட்டுக. மூரிச்சிலை - பெரிய வில். அவலம் அறுதற்குக் காரணமான சீவகன் என்க. அந்தில் - அவ்விடத்தே.

( 241 )
1798 தொடிகடவழ் வீங்குதிர டோளிறுக யாத்துக்
கடிகடவழ் குழன்மகளிர் கசிந்துமனங் கரியக்
கொடிகடவழ் மாடநகர்க் கொல்லவென மாழ்கி
யிடிகடவழ்ந் திட்டபட நாகமென வீழ்ந்தாள்.

   (இ - ள்.) தொடிகள் தவழ் வீங்குதிரள் தோள் இறுகயாத்து - தொடிகள் தவழ்கின்ற, பருத்துத் திரண்ட, தோள் இறுகப் பிணித்து; கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய - மணமுறும் தேன் பொருந்திய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் கசிந்து கருக; கொடிகள் தவழ் மாடநகர் கொல்ல; கொடிகள் தவழும் மாடங்களையுடைய நகரிலே கொல்லுதற்கு ; என - என்று தேவதத்தன் கூறிய அளவிலே; மாழ்கி - மயங்கி; இடிகள் தவழ்ந்திட்ட படநாகம் என வீழ்ந்தாள் - இடிகள் உடம்பு முழுதும் தவழப்பட்ட படத்தையுடைய நாகம்போல விசயை விழுந்தாள்.

   (வி - ம்.) கொல்லக் கொலைக்களம் குறுகலும் என்றுரைக்கப் புகுகின்றவன், 'கொல்ல' என்ற அளவிலே வீழ்ந்தாள். அரசன் கொல்லும்படி அவன் வென்று கொலைக்களங் குறுகலும் எனப் பொருள் கொள்க'இடிகள் உடம்பெங்குந் தவழ்ந்த நாகம்' - இல்பொருளுவமை. 'மோட்டு முதுநீர்' என்பது தொடங்கிக், 'கொல்ல' என்னும் சொல்வரை தேவதத்தன் கூற்று. ஒரு பெண்ணுயிரைக் காத்தவனைக் கோறல் அறம் அன்மையின், 'ஒரு தவறு' என்பதனை அரசனுடையதாக்குக.

   இங்கும் நச்சினார்க்கினியர், 'யாத்து' என்பதற்கு 'நாய்கன் பிணிக்க' என்றே பொருள் கூறுவர். 'நாய்கன்' என்ற சொல் முற்செய்யுளில் (1797) உள்ளது. தொடிகள் - வீரவளைகள். தவழ்தோள், வீங்குதோள், திரள்தோள் எனத் தனித்தனி கூட்டுக. இவைகள் மூன்றும் வினைத்தொகைகள்.

( 242 )