பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1026 

1808 புண்மல்கு மத்தகத்த போர்வேழம் பொற்பழித்த
மண்மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழிகேட்
டுண்மல்கு நெஞ்சினரா யொய்யெனவே வெய்துயிராக்
கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே.
 

   (இ - ள்.) புண் மல்கும் மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த - (தோட்டி எடாமற் கிடத்தலின்) புண்மிக்க மத்த கத்தையுடைய (கட்டியங்காரன் ஏறிய) போர் வேழத்தின் அழகைக் கெடுத்த; மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழி கேட்டு - பண்ணுதல் மிகுந்த தாரினையுடைய சீவகனுடைய தாயின் வாய்ச்சொல்லைக் கேட்டு; ஒய்யெனவே வெய்துயிரா - (அரசன் பட்டதற்கு) விரைந்து பெருமூச் செறிந்து; உள் மல்கு நெஞ்சினராய் - மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய்; கண் மல்கும் நீரார் - கண்ணிறைந்த நீரை உடையவராய்; முகம் முகங்கள் நோக்கினர் - ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினர்.

   (வி - ம்.) மண் மல்குதார் - பண்ணுதல் மிக்க மாலை. 'ஆவுதி மண்ணி' (மதுரைக். 494) என்றார் பிறரும். தோழர்களிடையே வாய்ப்பேச்சின்றிக் குறிப்பே நிகழ்ந்தது அரசன் மனைவியாகிய விசயையிடம் தாம் கொண்ட வழிபாட்டுணர்ச்சியினால்.

( 252 )
1809 கண்டீர் கருமம் விளைந்தவா றென்றாராய்
வண்டாரார் வண்கடக மின்னத்தங் கைம்மறித்துக்
கொண்டாங் கடல்வேலி கீழ்மகனைக் கூற்றமா
யுண்டா முயிரென் றுவப்பெழுந் தாடினரே.
 

   (இ - ள்.) வண் தாரார் - வளவிய தாரினராகிய அவர்கள்; கருமம் விளைந்த ஆறு கண்டீர் என்றாராய் - காரியம் முடிந்த படியைப் பாரீர் என்று வெளியாகக் கூறினராகி; வண் கடகம் மின்னத் தம் கைம் மறித்து - வளவிய கடகம் மின்னத் தம் கையைக் கவிழ்த்து; கீழ்மகனை உயிரைக் கூற்றமாய் உண்டாம் - கட்டியங்காரனுயிரைக் கூற்றமாகி உண்டிட்டோம்; கடல்வேலி கொண்டாம் - உலகைக் கைக்கொண்டோம்; என்று உவப்பு எழுந்து ஆடினர் - என்றுரைத்து உவகை மிக்கு ஆடினர்.

   (வி - ம்.) எதிர்காலத்தைத் துணிவினால் இறந்தகாலமாகக் கூறினார்.

1810 வீழ்ந்து மயில்போல் விசயை கிடந்தாளைத்
தாழ்ந்து பலதட்பந் தாஞ்செய்ய வேல்பெற்றுப்
போழ்ந்தகன்ற கண்ணாள் புலம்பா வெழுந்திருப்பச்
சூழ்ந்து தொழுதிறைஞ்சிச் சொன்னா ரவன்றிறமே.
( 253 )