பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1030 

வேறு

1817 வணக்கருஞ் சிலையி னானை
  யொருமதி யெல்லை நாளுட்
குணத்தொடு மலிந்த பாதங்
  குறுகயாங் கொணர்ந்த பின்றைப்
பணித்ததே செய்து பற்றார்
  பகைமுத லடர்த்து மென்றார்
மணிக்கொடி மாசுண் டன்னாண்
  மற்றதே துணிமி னென்றாள்.

   (இ - ள்.) வணக்க அருஞ் சிலையினானை - பிறரால் வணக்குதற்கரிய வில்லையுடைய சீவகனை; ஒருமதி எல்லை நாளுள் - ஒரு திங்கள் எல்லைப் போதிலே; குணத்தொடு மலிந்த பாதம் குறுக - பண்பினாலே நிறைந்த அடிகளின் திருவடியைக் குறுகும்படி; யாம் கொணர்ந்த பின்றை - யாங்கள் அழைத்து வந்த பிறகு, பணித்ததே செய்து - அருளிச் செய்ததையே செய்து; பற்று ஆர் பகைமுதல் அடர்த்தும் என்றார் - தழும்பேறிக் கிடந்த நிறைந்த பகையை முற்படக் கொல்லுவோம் என்றார்; மாசு உண்ட மணிக்கொடி அன்னாள் - அழுக்குண்ட மணிக்கொடி போன்ற விசயையும்; அதே துணிமின் என்றாள் - அதனையே துணிவாகக் கொண்மின் என்றாள்.

   (வி - ம்.) பிறரால் வளைத்தற்கரிய சிலையினையுடையானை என்க. சீவகனை, ஒருமதி - ஒரு திங்கள், குணத்தொடு மலிந்த பாதம் என்புழி முதலின் குணம் சினைமேலேற்றிக் கூறப்பட்டது. நின் பாதம் என்ற படியாம். அடர்த்தும்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று.

( 261 )
1818 பொறிதவ நெருங்க நோற்றுப்
  புகரற நிறைந்த கொள்கைச்
செறிதவ விசயை பாதஞ்
  சென்னியின் வணங்கி மீண்டு
வெறிகமழ் சோலை நண்ணி
  வேண்டிய வடிசில் கைதொட்
டெறிபடை யெழுக வென்றார்
  வளையெழுந் தார்த்த வன்றே.

   (இ - ள்.) பொறி தவ நெருங்க நோற்று - ஐம்பொறிகளும் புலன்களில் செல்லும் வேட்கை மிகுதியும் ஒடுங்கும்படி நோற்று; புகர்அற நிறைந்த கொள்கை - குற்றமின்றி நோன்பையுடைய; செறி தவ விசயை பாதம் - (முற்பிறப்பிலே) செறிந்த தவ