பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1031 

முடைய விசயையின் திருவடியை; சென்னியின் வணங்கி மீண்டு - தலையாலே தொழுது திரும்பி; வெறி கமழ் சோலை நண்ணி - மணங்கமழும் பொழிலை அடைந்து; வேண்டிய அடிசில் கைதொட்டு - விரும்பிய உணவை உண்டு; எறிபடை எழுக என்றார் - பகையை எறியும் படை எழுவதாக என்றனர்; வளை எழுந்து ஆர்த்தது - சங்கு மிகவும் முழங்கியது.

   (வி - ம்.) பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம் பொறிகளும். தவ - மிகுதியும், நெருங்க என்றது விரிவின்றி ஒடுங்க என்றவாறு. செறிதவம் : வினைத்தொகை, வெறி - மணம், அடிசில், கைதொட்டென்றது - உண்டு என்றவாறு, வளை - சங்கு.

( 262 )
1819 பைந்துகின் மகளிர் தேன்சோர்
  பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
  செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
  யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
  வரும்பொற்றா ரரவத் தாலே.

   (இ - ள்.) பைந்துகில் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணி - பைந்துகிலுடுத்த மங்கையர் தம்முடைய தேன் பொழியும் பவளம் போலும் வாய் சிவந்து விளங்க அதற்கு நாணுற்று; சிந்தித்து - அது தீரும்படியை ஆராய்ந்து ; கூந்தல் வாங்கி - தம் கூந்தலைக் குலைத்து; செவ்வணம் துடைப்பதே போல் - அச்சிவந்த வண்ணத்தைத் துடைப்பதைப்போல; இந்திர கோபம் கௌவி - இந்திர கோபம் என்ற பூச்சிகளைப் பற்றியவாறு; இறகு உளர்கின்ற மஞ்ஞை - இறகைக் கோதுகிற மயில்கள்; பாய்மா அரும் பொன் தார் அரவத்தால் - குதிரைகளின் கழுத்திற் கட்டிய அரிய பொன்னாலான கிண்கிணி மாலையின் ஒலியாலே; அந்தரத்து இவர்ந்த - வானிலே பறந்து சென்றன.

   (வி - ம்.) தேன் சோர்வாய், பவளவாய் என ஒட்டுக. செவ்வணம் - சிவப்பு நிறம். இந்திரகோபம் - ஒரு புழு. பாய்மா : வினைத்தொகை, பொற்றார் அரவத்தால் மஞ்ஞை அந்தரத்து இவர்ந்த என்க.

( 263 )
1820 சாந்தின்மேற் றொடுத்த தீந்தேன்
  றண்மதிக் கோடு போழப்
போந்துமட் டருவி வீழும்
  பொன்னெடுங் குன்று மந்த
ணேந்துபூங் காவு சூழ்ந்த
  விரும்புனல் யாறு நீந்தி
மாந்தரே மலிந்த நாடு
  மடுத்துடன் சென்ற தன்றே.