பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1035 

   வோம் என்றது வாய்மையானன்றிப் பொய்யாக ஆனிரையைக் கொள்வோம் எனினுமாம்.

( 269 )
1826 சேட்குலாஞ் சிலையொடு திளைத்த பின்னவர்
வாட்கலாம் வலித்தமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்புடைத் தெழுக வென்றுதன்
னாட்கெலாஞ் செப்பின னலர்ந்த தாரினான்.

   (இ - ள்.) சேண் குலாம் சிலையொடு திளைத்தபின் - தொலைவிலே யிருந்து, வளைந்த வில்லுடனே பொருதபின்; அவர் வாள்கலாம் வலித்து அமர் தொடங்கின் - அவர்கள் அணுகி வாட்போரைச் செய்யத் துணிந்து போர் தொடங்கின்; வல்லையே மீட்கலாம் - (நம்படையை ) விரைந்து மீட்கலாம்; விருப்பு உடைத்து - இஃது என் விருப்பமுடையது; எழுக என்று - புறப்படுக என்று; தன் ஆட்கு எலாம் - தன்னை ஒழிந்த மூவருக்கும் படை வீரர்க்கும்; அலர்ந்த தாரினான் செப்பினான் - மலர்ந்த மாலையான் கூறினான்.

   (வி - ம்.) திளைத்தல் - ஈண்டு போர்பொருதல். வாள்கலாம் - வாளாற் செய்யும் போர். வல்லையே - விரைந்து. தாரினான் : பதுமுகன்.

( 270 )

வேறு

1827 இருங்கடன் மணிநிரை யெய்திநாங் கொண்டபின்
னருங்கடி யணிநக ரையனங் கில்லையேற்
பெரும்படை தான்வரிற் பின்றிநீங் கிற்பழி
தரும்படித் தன்றியுஞ் சாற்றுவல் கேண்மினோ.

   (இ - ள்.) இருங்கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின் - பெரிய கடல்போன்ற ஆநிரைகளை அடைந்து நாம் கொண்ட பிறகு; அருங்கடி அணி நகர் அங்கு ஐயன் இல்லையேல் - அரிய காவலையும் அழகினையும் உடைய நகரமாகிய அங்கே நம் சீவகன் இல்லையெனில்; பெரும்படை தான்வரின் - (அதனுடன்) பெரிய படையும் வந்துவிட்டால்; பின்றி நீங்கின் பழிதரும் படித்து - (அஞ்சினாரைப்போல) யாம் மீண்டு போந்தால் தோற்றார்கள் என்று பழிக்கும்படியாயிருக்கும்; அன்றியும் சாற்றுவல் கேண்மின் - அஃதன்றியும் பின்னும் ஒன்று கூறுவேன் கேளுங்கள்.

   (வி - ம்.) இது புத்தி சேனன் கூற்று.

   இருங்கடல் - பெரியகடல்; இஃது ஆனிரைக்குவமை. அணிநகரங்கு என ஒட்டுக. ஐயன் : சீவகன், ஐயன் இல்லையாகப் படை வருதல் ஒருதலை; அதுவரின் என்றவாறு. பின்றி - மீண்டு. அச்செயல் பழிதரும் படித்து என்க.

( 271 )