பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 104 

சிறப்பு. ஆதரம் பெருகும் அன்பாவது - புணர்வதன் முன்னும் பின்னும் ஒருதன்மைத்தாய்ச் செயற்கையால் மிகும் அன்பு. அன்னம்: புணர்ச்சியால் மெய்யுருகும் மென்மைக்கு உவமம். பலரும், 'துணைபுணர் அன்னத்தின் தூவி' (கலி. 72, சிலப். 3- 66) என்று,புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்கும் என்றார். 'ஒத்தும்' என்பதனை முன்னும் பின்னும் கூட்டுக. இவ்வெச்சத்தைத் தீதிலாரில் 'தீதின்மையோடு முடிக்க. 'தீதிலாத் திளைப்பிற்' பாடமாயின் ஆமானை யொத்தும் தீதிலா மாதராரும் களிறனானும் என்க. ஆமான் நக்குங்காற் பிறக்கும் இனிமையே ஈண்டு உவமம். ஏகாரம் (செல்வமே) தேற்றம்.

 

   ஆமான் செல்வம் என்பதற்கு ஆமானின் திளைப்புச் செல்வம் எனப் பொருள் கொண்டு ஆற்றொழுக்காகப் பொருள்கோடலாலும் இங்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் கிடைத்தலை உணர்க.

( 160 )
190 தன்னமர் காத லானுந் தையலு மணந்த போழ்திற்
பொன்னனா ளமிர்த மாகப் புகழ்வெய்யொன் பருகி யிட்டான்
மின்னவிர் பூணி னானை வேற்கணார்க் கியற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி யிட்டாள்.

   (இ - ள்.) தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில் - தன்னால் விரும்பப்பட்ட காதலனும் அவளும் கூடியபோது; புகழ்வெய்யோன் பொன் அனாள் அமிர் தம் ஆகப் பருகியிட்டான் - புகழை விரும்பிய அவன் திருவையனையாளை அமுதமாகப் பருகினான்; மாதரும் மின் அவிர் பூணினானை வேல்கணார்க்கு இயற்றப்பட்ட மன்னிய மதுவன் வாங்கிப் பருகியிட்டாள் - விசயையும் ஒளிவிளங்கும் பூணினானை மங்கையர்க்குச் சமைத்த மதுவைப் போல ஏற்று (அவன் பருகின தன்மையை அவளும் கண்டு) பருகினாள்.

 

   (வி - ம்.) வாங்கிப் பருகல் - அவன் காட்டக் கண்டு பருகியிடுதல்; ஒரு சொல். இதனால் அதர பானமும் அல்குற் பானமும் கூறி மேல் இவற்றிற்கு உவமை கூறுகின்றார்.

( 161 )
191 பவழவாய் பரவை யல்கு லென்றிவை பருகும் வேலான்
கவழமார் களிறு போன்றான் காதலி கரும்பை யொத்தா
டவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவ தாக
வுமிழ் நகை வேலி னானு மொண்சிறை மணிவண் டொத்தான்.

   (இ - ள்.) பவழவாய் பரவை அல்குல் இவை என்று - பவழம் அனைய சிவந்த இதழையும் பரப்புடைய அல்குலையும் கரும்பும் தாமரைப்பூவும் என்று மனத்திற்கொண்டு ; பருகும் வேலான் - நுகரும் சச்சந்தன்; கவழம்ஆர் களிறு போன்றான் - (பவழவாயைப் பருகும்போது) கவளத்தை யுண்ணும் களிற்றைப் போன்றான்; காதலி கரும்பை ஒத்தாள் - விசயை கரும்பைப் போன்றாள்; தவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவதாக-