பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1043 

1844 பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டியவன்
வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக்
கொண்டதன் றம்பியுந் தானுங்கோ யில்புகக்
கண்டனங் கண்ணினே யென்றுகண் டவர்சொனார்

   (இ - ள்.) பிண்டம் உண்ணும் பெருங்களிறு பூட்டி - கவளம் உண்ணுதற்கு விழைந்த பட்டத்துக்குரிய களிற்றைக் களிற்றைக் கம்பத்திலே கட்டி; அவண் வண்டரும் ஓவரும் பாட - அங்கே மங்கலப் பாடகரும் வாழ்த்துக் கூறுபவரும் பாட ; மாநகர் தொழ - அப் பெருநகரம் வணங்க; கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புக - இச் சிறப்பைக்கொண்ட தானும் தன் தம்பியுமாகத் தனக்குரிய கோயிலிலே நுழைய; கண்ணின் கண்டனம் என்று - கண்ணாலே பார்த்தோம் என்று; கண்டவர் சொனார் - பார்த்து வந்த ஒற்றர்கள் உரைத்தனர்.

   (வி - ம்.) கண்ணினே : ஏ : அசை. கண்டவர் என்றது முன்னர் இயம்புகின்றார் என்ற ஒற்றரைச் சுட்டிநின்ற பெயராகக்கொண்டு, அவர் இங்ஙனங் கூறினார் என்க. நந்தட்டன் கூட நிற்றலின் சீவகன் என்று உணர்ந்தார்.

   [நச்சினார்க்கினியர் முன்னர் (சீவக. 1713, 1718, 1721, 1722 முதலிய செய்யுட்களில்) சீவகனும் வேற்று வடிவுடன் இருந்தான், நந்தட்டனையும் சீவகனைப்போலவே வேற்றுருவுடன் இருக்கத் தன் விஞ்சையால் மாற்றியனுப்பினாள் என்று கூறியவர் ஈண்டு, நந்தட்டனை ஒற்றர் அறிந்தனர் என்றும், அவனால் உடன் இருப்பவன் சீவகன் எனக் குறித்தறிந்தனர் என்றுங் கூறுகின்றனர்.]

( 288 )
1845 பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற் றாளர்சொற்
கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி யுவகையிற்
றூத்திரட் சுறாவினந் தொக்கபோன் மறவரு
மேத்தருஞ் சிலைகைவா ளிலங்குவே லேந்தினார்.

   (இ - ள்.) பாத்து இல் சீர்ப் பதுமுகன் படிவ ஒற்றளர் சொற்கு ஓத்தென - நீக்கம் இல்லாத புகழையுடை பதுமுகன் மறைந்த வேடங்கொண்ட ஒற்றர் ஒருவர் கூறிய சொற்கு மற்றும் இருவர் சொல்லும் சேர்ந்தது என்று கருதி; உவகையின் கொழுநிதி கொடுத்தனன் - மகிழ்ச்சியால் வளவிய செல்வத்தைக் கொடுத்தான்; தூத்திரள் சுறா இனம் தொக்கபோல் - வலிய திரட்சியையுடைய சுறாவின் கூட்டம் குழுமினபோல; மறவரும் ஏத்த அருஞ்சிலை வாள் இலங்குவேல் கை ஏந்தினார் - புகழ்தற்கரிய சிலையையும் வாளையும் விளங்கும் வேலையும் கையினில் ஏந்தினர்.

   (வி - ம்.) ஒத்ததென என்பது ஓத்தென விகாரமுற்றது; ஓத்து : விதியுமாம்.