பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1044 

   பாத்தில் - பாத்தல் இல்லாத - பகுத்தல் இல்லாத; நீங்குதல் இல்லாத என்றவாறு, படிவம் - மறைந்த வேடம். ஒத்ததென எனற்பாலது முதனீட்டல் விகாரமும் தகர அகரம் கெடுதல் விகாரமும் எய்தி ஓத்தென என்றாயிற்று. ஓத்து என்றே கொண்டு விதி எனினுமாம். இப்பொருட்கு ஒற்றாளர் சொற்கு நிதிகொடுத்தல் விதியெனக் கருதிக் கொழுநிதி கொடுத்தனன் எனப் பொருள் கூறுக.

( 289 )
1846 வேனிரை வாண்மதில் பிளந்துவெஞ் சமத்திடைத்
தேனிரை களிற்றின்மேற் றிண்குளம் பழுத்துவ
வானிரை வளைப்பதோர் பொருளெனச் சிரித்துடன்
மாநிரை பண்ணினார் வடித்தநூற் கேள்வியார்.

   (இ - ள்.) வடித்த நூல் கேள்வியார் - ஆராய்ந்த நூல்களைக் கேட்ட அவர்கள்; வேல் நிரை வாள்மதில் வெஞ்சமத் திடைப்பிளந்து - வேலாகிய காவல் காட்டையுடைய வாள் மதிலைப் போரிலே பிளந்து; தேன் நிரை களிற்றின்மேல் திண் குளம்பு அழுத்துவ - வண்டுகள் மொய்க்கும் களிற்றின்மேல் தம் திண்ணிய குளம்பை அழுத்துவனவாகிய; மாநிரை - குதிரைத் திரள்; ஆனிரை வளைப்பது ஓர் பொருள் எனச் சிரித்து - (இப்போழுது) ஆவின் திரளை வளைப்பதாகிய ஒரு பொருளையுடையது என்று நகைத்து; உடன் பண்ணினார் - ஒரு சேர அம் மாநிரையைப் பண்ணினார்.

   (வி - ம்.) வேனிரை, வாண்மதில் இரண்டும் பண்புத்தொகை, சமம் - போர், தேன் - வண்டுகள், நிரைகளிறு : வினைத்தொகை, மாநிரை - குதிரை அணி.

( 290 )

வேறு

1847 விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால்வளை
முடியுல குறநிமிர்ந் தார்த்த மொய்கழ
லடுபடை யிளையரு மரணம் வீசினார்.

   (இ - ள்.) விடை உடை இனநிரை விழுங்கல் மேயினார் - எருதுகளையுடைய ஆனிரையைக் கொள்ள விரும்பினாராக; துடியொடு சிறுபறை துவைத்த - துடியும் சிறுபறையும் ஒலித்தன, வால்வளை முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த - வெள்ளிய சங்குகள் வானுலகு பொருந்த ஓங்கி ஒலித்தன; மொய் கழல் அடுபடை இளைஞரும் அரணம் வீசினார் - மொய்கழலையுடைய அடுபடை யேந்திய வீரரும் கவசத்தை அணிந்தனர்.

   (வி - ம்.) விடை - காளை, துவைத்த; பலவறிசொல்; வால்வளை வெள்ளிய சங்கு, முடியுலகு - மேலுலகம், அரணம் - கவசம்.

( 291 )