பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1045 

1848 காந்தளங் கடிமலர்க் கண்ணி நெற்றிய
ராய்ந்தளந் தியற்றிய வத்து ணாடையார்
வேய்ந்துணி யலமரும் புறத்தார் வெஞ்சுட
ரேந்தெழி னவியமு மேந்து தோளினார்

   (இ - ள்.) அம் கடிகாந்தள் மலர்க் கண்ணி நெற்றியார் - அழகிய மணமுடைய காந்தள் மலர்க் கண்ணியையுடைய நெற்றியராய்; ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர் - ஆராய்ந்து அளந்து நெய்யப்பட்ட சிவப்பு நிறம் ஊட்டப்பெற்ற ஆடையினராய்; வேய்ந்துணி அலமரும் புறத்தர் - மூங்கில் குழல் அசையும் முதுகினராய்; வெஞ்சுடர் ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார் - வெவ்விய ஒளியைத் தன்னிடத்தே ஏந்திய அழகிய கோடரியைத் தாங்கிய தோளினராய்,

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

   அளந்தியற்றுதல் - இந்த ஆடைக்கு இஃது அளவு என்று அளந்து பண்ணுதல். அத்து - சிவப்பு. வேய்ந்துணி-மூங்கில் துண்டம் (குழல்) வேய்த்துணி, வேய்ந்துணி : உறழ்ச்சி.

( 292 )
1849 கோனுடை யினநிரை காக்குங் கோவலர்
தேனொடு கடிச்சுரும் பரற்றும் தேமலர்க்
கானிடை யினநிரை காவல் போற்றுமி
னானிடை யழித்தபுள் ளென்று கூறினார்.

   (இ - ள்.) கோன் உடை இனநிரை காக்கும் கோவலர் - அரசனுடைய இனங்களாகிய நிரையைக் காக்கும் ஆயர்; தேனொடு கடிச் சுரும்பு அரற்றும் தே மலர்க் கானிடை - தேனும் சுரும்பும் முரலும் தேனையுடைய மலர் நிறைந்த காட்டிலே; இனநிரை காவல் போற்றுமின் - இனநிரைகளைக் காப்பாற்றுதலைப் போற்றுமின்; ஆனிடை புள் அழித்த - பசுத்திரளின் இடையிலே காரி யென்னும் பறவைகள் எழுந்தன; என்று கூறினார் - என்றுரைத்தனர்.

   (வி - ம்.) கோன் - அரசன். இனநிரை - ஆன்சுட்டம். கோவலர் - இடையர். தேன், சுரும்பு என்பன வண்டின்வகை. கான் - காடு. புள் - காரி என்னும் பறவை. ”மணிநிரைக் கட்சியுள் காரியெழும்” என்றார் வெண்பாமாலையினும் (பு. வெ. 3. பி-ம்.)

( 293 )