பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1047 

   (இ - ள்.) தேர்த் தொகைத் தானை மன்னன் - தேர்ப்படையையுடைய தடமித்தன்; சீவகற்கு இளைய நம்பி - சீவகனுக்கு இளையவனான நம்பியாகிய; வார்த்தொகை முழவம் விம்மமல் உறழ தோளினானை - வாராற் கட்டப்பெற்ற முழவம் தோற்றுவிம்மா நிற்ப மல்லுடன் மாறுபட்ட தோளையுடைய நந்தட்டனை; நீர்த்தொகைக் கழனி நாடும் நெடுநகர்ப் பெயரும் நுங்கள் சீர்த்தொகைக்குலனும் - நீர் திரண்ட கழனியை உடைய நாட்டையும் பெரு நகரின் பெயரையும் உங்கள் சிறப்புறு குலமும்; எல்லாம் தெரிந்து எமக்கு உரை என்றான் - யாவற்றையும் தெரியும்படி எமக்குக் கூறுக என்றான்.

   (வி - ம்.) தெரிந்து - தெரிய : எச்சத்திரிபு.

   தானை மன்னன் - தடமித்தன், இளையநம்பி - நந்தட்டன், முழவம் இதனை (தோளை) ஒவ்வேன் என வருந்தி அழாநிற்ப மல்லுடன் உறழ்ந்த தோள் என்க. விம்ம என்றது சிலேடை. அழ - ஒலிப்ப என்னும் பொருளது. உரைமோ - மோ : முன்னிலையசை.

( 296 )
1853 திருக்குறிப் பன்ன தாயிற்
  செப்புவ லடிகள் செம்பொ
னரித்தசும் பொழுகு குன்றத்
  தருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரைப்
  பார்ப்பொடு மருதிற் சேக்கு
முரைத்தகு நாடு மூருங்
  குலத்துட னுணர வென்றான்.

   (இ - ள்.) அடிகள் - அடிகளே!; திருக்குறிப்பு அன்னது ஆயின் - திருவுள்ளக் கருத்து அத்தகையது எனின்; செம் பொன் அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் - பொன்னை அரித்துக்கொண்டு அசும்பெடுத்து ஒழுகும் குன்றத்தின் அருவியினால்; வெரீஇய மஞ்ஞை பரித்தவை - அஞ்சிய மயில்கள் ஓடினவை; பழனம் நாரைப் பார்ப்பொடு - பழனத்திலுள்ள நாரைப் பார்ப்புகளுடன்; மருதின் சேக்கும் - மருத மரத்திலே தங்குகின்ற; உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர - உரைக்கத்தக்க நாட்டையும் ஊரையும் குலத்தையும் அறிந்து கொள்ளும்படி; உணரச் செப்புவல் என்றான் - அறிந்து கொள்ளுமாறு உரைப்பேன் என்றான்.

   (வி - ம்.) திருக்குறிப்பு - திருவுள்ளக் குறிப்பு. செப்புவல் - தன்மை ஒருமை வினைமுற்று. அடிகள் - விளி. அசும்பு - ஊற்று. வெரீஇய - வெருவிய; அஞ்சிய. பரித்தவை - ஓடியவை. பழனம் - வயல். உரைத்தகு - புகழத் தகுந்த.

( 297 )