பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1050 

   (இ - ள்.) எரித்திறல் வென்றி வேந்தற்கு - தீப்போலும் வலிமையையும் வென்றியையுமுடைய தடமித்தனுக்கு; இற்று என் இசைப்ப - இத் தன்மைத் தென்று அதைப்பற்றிக் கூறியதனால் ; மருப்பு உறக் கந்து பாய்ந்து முழங்கும் மால் களிறு போலச் சீறி - கொம்பு பொருந்தத் தூணைக் குத்திப் பிளிறும் பெரிய களிற்றைப்போல; திருக்கிளர் மணி செய் பொன் தூண் தீப்படப் புடைத்து - அழகு பொருந்திய மணிகளிழைத்த பொற்றூணிலே தீயுண்டாக அறைந்து; செங்கண் எரிதவழ உருத்து நோக்கி - செங்கண்களிலே நெருப்பெழச் சினந்து நோக்கி; உடல் சினங் கடவச் சொன்னான் - மெய்யினைச் சீற்றம் தூண்டக் கூறினான்.

   (வி - ம்.) எரிபோலும் வலிமையுடைய வென்றி - கொன்று வெல் லும் வென்றி.

   மருப்பு - கொம்பு, மால் - பெரிய, மணிகளிழைத்தியற்றிய பொற்றூண் என்க. சினங்கொண்டுழித் தூணைப்புடைத்தல் ”பன்மணிக்கடகஞ் சிந்தப் பருப்புடைப் பவளத்தூண்மேல் மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து” என்புழியுங் காண்க (சீவக.1282) ”எழுவுறழ் திணிதோள் எடுத்தனன் ஓச்சிப் பொழிமணித்திண்டூண் பொறிபடப் புடைத்து” என்றார் கதையினும் (1.17 : 109 -10). உடல்சினம் : வினைத்தொகையுமாம்.

( 301 )
1858 நாற்கடற் பரப்பும் வந்து
  நன்னகர்க் கண்ணுற் றென்ன
வேற்கடற் றானை பாய்மா
  விளங்கொளி யிவுளித் திண்டோ்
கூற்றென முழங்கு மோடைக்
  குஞ்சரக் குழாத்தோ டேகிப்
பாற்கடற் பரப்பின் வல்லே
  படுநிரை பெயர்க்க வென்றான்.

   (இ - ள்.) நாற்கடற் பரப்பும் வந்து - பரவிய நான்கு பக்கக் கடல்களும் வந்து; நல் நகர்க்கண் உற்று என்ன - அழகிய நகரிலே உற்றாற்போல; வேல் கடல் தானை பாய்மா விளங்கு ஒளி இவுளித் திண்தேர் - வேலேந்திய கடலனைய படையும், குதிரையும், விளங்கும் ஒளியை உடைய குதிரை பூட்டிய திண்ணிய தேரும்; கூற்றென முழங்கும் ஓடைக் குஞ்சரக் குழாத்தொடு ஏகி - காலனைப்பேல முழங்கும், நெற்றிப்பட்டம் அணிந்த யானையும் ஆகிய படைத்திரளுடன் சென்று; பால்கடல் பரப்பின் படுநிரை வல்லே பெயர்க்க என்றான் - பாற்கடல் போலப் பாலுடன் பரவிய ஆனிரையை விரைந்து திருப்புக என்றுரைத்தான்.