பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1052 

செலுத்தும்படி ஏறி; அமர்ந்து; கூன் நிறக் குழவித் திங்கள் குளிர்கதிர் ஆரம் மார்பின் - வளைந்த ஒளிபொருந்திய பிறைத்திங்கள்போலக் குளிர்ந்த முத்துமாலை அணிந்த மார்பினையும்; தேன் நிறம் கொண்ட கண்ணி - தேனையுடைய ஒளிகொண்ட மாலையினையும் உடைய; சீவக குமரன் சொன்னான் - சீவகன் ஒருமொழி உரைத்தான்.

   (வி - ம்.) பானிறக்கவரி - பால்போலும் நிறமுடைய கவரி, திண்டேர் உறப்பண்ணி என இயைக்க. தான்; அசை, தம்பி ; நந்தட்டன்.

( 304 )
1861 மன்னவ னிரைகொண் டாரை
  வளநகர்த் தந்து மன்னன்
பொன்னவிர் கழலிற் றங்கள்
  புனைமுடி யிடுவி யேனே
லின்னிசை யுலகந் தன்னு
  ளென்பெயர் சேற லின்றாய்க்
கன்னிய மகளிர் நெஞ்சிற்
  காமம்போற் கரக்க வென்றான்.

   (இ - ள்.) மன்னவன் நிரை கொண்டாரை வளநகர்த் தந்து - அரசனுடைய நிரையைப் பற்றியவரை வளமிகு இந்நகரிற் கொணர்ந்து; மன்னன் பொன் அவிர் கழலில் தங்கள் புனைமுடி இடுவியேனேல் - அரசனுடைய பொன் விளங்குங் கழலணிந்த திருவடியிலே அவர்களுடைய அணிமுடியைப் பொருத்திலேனெனின்; இன் இசை உலகந் தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய் - இனிய புகழை உடைய உலகிலே என் பெயர் செல்லுதல் இன்றி; கன்னி மகளிர் நெஞ்சில் காமம் போற்கெடுக என்றான் - கன்னியராகிய பெண்களின் உள்ளத்திலே உண்டான காமம் வெளிவராது அழிதல்போல அழிக என்றான்.

   (வி - ம்.) கன்னிய; அ : அசை. அரசனைக் காணாமலே இவ் வஞ்சினங் கூறினான்.

( 305 )
1862 பார்மலி பரவைத் தானைப்
  பரப்பிடைப் பறப்ப தேபோ
னீர்மலி கடாத்த கொண்மூ
  நெற்றிமேன் மின்னி னொய்தாத்
தார்மலி மார்பன் றிண்டோ்
  தோன்றலுந் தறுகண் மைந்தன்
சீர்மலி பகழி யேந்திப்
  பதுமுகன் சிலைதொட் டானே.