பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1053 

   (இ - ள்.) பார்மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்பதே போல் - நிலம் நிறையக் கடல் போலப் பரவிய படையின் இடையிலே பறப்பதுபோல; நீர்மலி கடாத்த கொண்மூ நெற்றிமேல் மின்னின் நொய்து ஆ - கடல் போலும் நிறைந்த மதத்தையுடைய முகிலின் தலையிலே தோன்றுகின்ற மின்னினும் கடிதாக; தார்மலி மார்பன் திண் தேர் தோன்றலும் - மாலை நிறைந்த மார்பனாகிய சீவகனுடைய திண்ணிய தேர் தோன்றிவுடன்; தறுகண் மைந்தன் பதுமுகன் - அஞ்சாத மைந்தனாகிய பதுமுகன்; சீர்மலி பகழி ஏந்திச் சிலை தொட்டான் - சிறப்புடைய கணையை ஏந்தி வில்லிலே தொடுத்தான்.

   (வி - ம்.) கொண்மூ போன்றது : யானை.

   கடல்போல நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் தலையிற்றோன்றுவதொரு மின்னினுங் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானை, மார்பன் - சீவகன். மைந்தனாகிய பதுமுகன் என்க.

( 306 )
1863 குடைநிழற் கொற்ற வேந்த
  னொருமகற் காணக் குன்றா
வடிநிழ லுறைய வந்தே
  மடியம்யா மென்ன வெய்த
விடுகணை சென்று தோ்மேற்
  பின்முனா வீழ்த லோடுந்
தொடுகழற் குருசி னோக்கித்
  தூத்துகில் வீசி னானே.

   (இ - ள்.) குடைநிழல் கொற்ற வேந்தன் ஒருமகன் காண - குடை நிழலில் இருந்த கொற்ற வேந்தனாகிய சச்சந்தின் ஒரே மகனைக் காண்பதற்கும்; குன்றா அடிநிழல் உறைய - குறைவில்லாத அவனுடைய திருவடி நிழலிலே வாழ்வதற்கும்; அடியம்யாம் வந்தேம் - அடியமாகிய யாம் வந்தேம்; என்ன எய்த விடுகணை சென்று - என்று அறிவிக்குமாறு விடப்பட்ட அக்கணை சென்று; தேர் மேல் பின் முனா வீழ்தலோடும் - தேரின் மேல் மாறி வீழ்ந்த அளவிலே; தொடுகழல் குருசில் நோக்கி - அணிந்த கழலையுடைய சீவகன் பதுமுகனே எனக் கண்டு; தூத்துகில் வீசினான் மேலே பொராதபடி தூய ஆடையை எடுத்து வீசித் தன் படையை விலக்கினான்.

   (வி - ம்.) 'விடுகணை' என்பது கணை என்னும் பெயரளவாகியது.

   'அறிவிக்கும்படி எழுதி எய்த அம்பு' என்பர் நச்சினார்க்கினியர். குருசில் - சீவகன். தூத்துகில் - வெள்ளிய ஆடை. போரை நிறுத்தியதற்கு அறிகுறியாக வெள்ளையாடை வீசினான் என்பது கருத்து.

( 307 )