பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 106 

வேறு

 
193 துறுமலர்ப் பிணையலுஞ் சூட்டுஞ் சுண்ணமு
நறுமலர்க் கண்ணியு நாறு சாந்தமு
மறுநிலத் தமிர்தமு மகிலு நாவியும்
பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்.

   (இ - ள்.) துறுமலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும் - மலர் நெருங்கும் மார்பின் மாலையும் நெற்றிக்கட்டும் சுண்ணப்பொடியும்; நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும் - நல்ல மலரால் ஆன முடிமாலையும் மணமுறு சந்தனமும்; அறுநிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் - அறுசுவை உண்டி முதலியனவும் அகிலும் புழுகும் ஆகிய இவைகள்; பெறுநிலம் பிணித்திட - தம்மை நுகரும் ஐம்பொறிகளைப் பிணிப்ப உயர்ந்த இவர்கள் இன்பமுற்றிருந்தனர்.

 

   (வி - ம்.) அமிர்தம் - அடிசிலும் பானமும் முதலியன. இனி, அறு நிலத்தமிர்தம் - அறுசுவையுமாம்; ஆறு காலத்திற்கு [இளவேனில் முதலியன] உரிய பானமும் ஆம்.

( 164 )
194 துடித்தலைக் கருங்குழற் சுரும்புண் கோதைதன்
னடித்தலைச் சிலம்பினோடு டரவ மேகலை
வடித்தலைக் கண்மலர் வளர்த்த நோக்கமோ
டடுத்துலப் பரிதவ ரூறி லின்பமே.

   (இ - ள்.) அவர் ஊறுஇல் இன்பம் - அவர்களுடைய இடையூறில்லாத இன்பம்; துடித்தலைக் கருங்குழல் சுரும்புஉண் கோதை தன் - ஏலம் என்னும் மயிர்ச் சாந்தணிந்த கருங்குழலையும் வண்டு நுகரும் மாலையையும் உடைய விசயையின்; வடித்தலைக் கண்மலர் வளர்த்த நோக்கமோடு - மாவடுவனைய கண்மலர்கள் ஊடலையுங் கூடலையும் விளைவித்த நோக்கத்தாலே; அடித்தலைச் சிலம்பினோடு மேகலை அரவம் அடுத்து - (அவள் ஊடினபோது) அடி அவன் தலையிற் படுதலிற் பிறந்த சிலம்பின் ஒலியோடும்; (கூடின காலத்துப் பிறந்த) மேகலையின் ஒலியோடும்; (உலப்பு அரிது - முடிதல் அரிதாயிருந்தது.

 

   (வி - ம்.) 'அவன் ஊறில் இன்பம் ' என்றும் பாடம்.

 

   துடி - ஏலம். வடித்தலைக்கண் - ஒப்பினால் வடுவகிரிடத்தே நிற்குங்கண்

( 165 )
195 இழைகிள ரிளமுலை யெழுது நுண்ணிடைத்
தழைவளர் மதுமலர் தயங்கு பூஞ்சிகைக்
குழைமுகக் கொடியொடு குருதி வேலினான்
மழைமுகின் மாரியின் வைகு மென்பவே.